கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு


கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 2 April 2021 3:34 PM GMT (Updated: 2 April 2021 3:34 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்: 

செம்பட்டி அருகே காமுபிள்ளைசத்திரம் கிராமம் உள்ளது. 

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் அரசு பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 

இங்கு காமுபிள்ளைசத்திரம், சுக்குலாபுரம், புதுக்காமன்பட்டி மற்றும் புதுச்சத்திரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்து வந்தனர். 

ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு காமுபிள்ளைசத்திரம் கிராம மக்கள் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எஸ்.புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 இதையடுத்து எஸ்.புதுக்கோட்டைக்கு சென்று வாக்களிக்கமாட்டோம் என்று அந்த கிராம மக்கள் நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். 

அப்போது அவர் இந்த தேர்தலில் வாக்குச்சாவடியை மாற்ற முடியாது. அடுத்த தேர்தலில் மாற்றம் செய்யலாம் என்று கூறியதாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் காமுபிள்ளைசத்திரத்தில் வாக்குச்சாவடி அமைக்க வேண்டும், இல்லையென்றால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக சுவரொட்டி அச்சடித்து ஒட்டினர். 

மேலும் சுவரொட்டி அருகே கருப்புக்கொடியை ஏற்றி வைத்தனர். 

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story