தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு


தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 3 April 2021 4:56 AM IST (Updated: 3 April 2021 4:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தேர்தல் பிரசாரம் ஓயும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்க இருக்கிறது. தேர்தல் பிரசாரம் 4-ந் தேதி இரவு 7 மணிக்கு முடிவடைகிறது. அதன் பிறகு,

* தேர்தல் சம்பந்தமான பொதுக்கூட்டமும் ஊர்வலமும் நடத்தக்கூடாது.

* தேர்தல் சம்பந்தமாக சினிமா தியேட்டர் மூலமாகவோ, தொலைக்காட்சி மூலமாகவோ அல்லது வேறு எந்த எலக்ட்ரானிக் பொருட்கள் மூலமோ பிரசாரங்கள் வெளியிடக்கூடாது.

* இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும், வேறு எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பொதுமக்களை கவர்கின்ற வகையில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. இவைகள் மீறப்பட்டால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

வெளியேற வேண்டும்

* 4-ந் தேதி இரவு 7 மணிக்குள், ஒரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளராக இல்லாத வெளியாட்கள் அனைவரும் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

* ஒருவேளை அந்த குறிப்பிட்ட தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் வேறு தொகுதியில் வாக்காளராக இருந்தாலும், அவரை வெளியே செல்ல கட்டாயப்படுத்தக்கூடாது. ஆனால், அதேநேரத்தில் அவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது.

* தொகுதியின் வாக்காளர் இல்லாத வெளியாட்கள் அனைவரும் 4-ந் தேதி இரவு 7 மணிக்குள் வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதி செய்ய, அந்தந்த தொகுதியில் அமைந்துள்ள கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் தேர்தல் ஆணைய அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

வாகன அனுமதி

* சட்டமன்றத் தொகுதிக்கு வெளியிலிருந்து உள்ளே வரும் வாகனங்களை பரிசோதனை செய்ய அந்தந்த சட்டமன்ற தொகுதியின் எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். பிரசாரத்துக்காக அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் அனுமதி 4-ந் தேதி இரவு 7 மணி யுடன் முடிவடைந்துவிடும்.

* தேர்தல் நாளன்று ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற முடியும். அதாவது, தன்னுடைய பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தன்னுடைய தேர்தல் பொது முகவர் பயன்பாட்டுக்கான வாகனம், வேட்பாளருக்காக அல்லது கட்சிக்காக பணியாற்றுபவர்களுக்கான வாகனம் ஆகியவையாகும்.

இந்த 3 வாகனங்களுக்கும் அளிக்கப்படும் அனுமதி, வாக்குப்பதிவு நாள் அன்றைக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.

* அனுமதிக்கப்பட்ட இந்த 3 வாகனங்களை மட்டுமே வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட வேண்டும்.

தற்காலிக பூத்

* வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரவும், திரும்ப சென்று அவர்களை வீட்டில் விடவும் எந்தவிதமான வாகனங்களையும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வைத்துக்கொள்ளக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டனைக்கு உரியதாகும்.

* வாக்குச்சாவடி இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தள்ளி தேர்தல் நாள் பணிகளுக்காக தற்காலிக பூத் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

* அதில் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் வாக்காளராக உள்ள 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.

* அந்த இடத்தில் உணவு பொருட்கள் எதுவும் வழங்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story