கோவை தெற்கு தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே என் இலக்கு - கமல்ஹாசன் பேச்சு
கோவை தெற்கு தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே என் இலக்கு என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கோவை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில், வரும் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட உக்கடம், தெப்பக்குளம் பகுதியில் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், 4 வருடங்களுக்குள் கோவை தெற்கு தொகுதியை மற்ற தொகுதிகளுக்கு முன் உதாரணமாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. இது உறுதிமொழியில்லை என்னுடைய இலக்கு. இதை செய்யாமல் நான் ஓயமாட்டேன்...தலை சாயமாட்டேன்’ என்றார்.
பிரசாரத்தின்போது கமல்ஹாசனுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியான சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் பேசிய சரத்குமார், உழைத்து சம்பாதிக்கும் 100 ரூபாய்தான் உடம்பில் ஒட்டுமே தவிர அவர்கள் (கட்சிகள்) கொடுக்கின்ற பணத்தை வாங்கி உங்கள் வாக்குகளை விற்றால் அடுத்த தலைமுறை சீரழிந்துவிடும்’ என்றார்.
Related Tags :
Next Story