அதிமுக, பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
அதிமுக, பாமக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
''தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதற்கான 16-வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 15 சட்டப்பேரவைத் தேர்தல்களை விட இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. மகாபாரத புராணத்தைப் போன்று நன்மையை வீழ்த்த பெருந்தீமை துடித்துக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் ஆகும்.
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டன. இத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு கட்சியின் தலைவரும், அந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இதுவரை நடைபெற்றது பிரச்சாரக் காலம் என்றால், இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் முடிவடைவது முதல் நாளை மறுநாள் வாக்குச்சாவடிக்குச் சென்று நீங்கள் வாக்களிப்பது வரையிலான காலம்தான் இந்த ஜனநாயகத் திருவிழாவில் நமது விலைமதிப்பில்லாத வாக்கை யாருக்கு அளிப்பது என்பது பற்றி, தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தீர்மானிப்பதற்கான சிந்தனைக் காலம் ஆகும்.
நமது வாழ்க்கையில் அனைத்தையும் நாம் தகுதி, திறமை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தேர்வு செய்கிறோம். அவ்வாறு இருக்கும்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம்மை ஆளப் போகிறவர்கள் யார்? என்பதையும் அவர்களின் தகுதி, திறமை மட்டுமின்றி, கடந்த கால வரலாற்றையும் ஆய்வு செய்துதான் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களாலும் நிம்மதியாக வாழ முடியும்.
எனவே, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவதை உறுதி செய்ய நாளை மறுநாள் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவளித்து அதன்மூலம் தமிழகத்தில் நல்லாட்சி தொடரச் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story