வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல 227 போலீஸ் குழுக்கள்
சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்ல 227 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களிடம் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
திண்டுக்கல்:
2,673 வாக்குச்சாவடிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை 10 முதல் 13 வாக்குச்சாவடிகளாக பிரித்து மண்டலமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 266 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மண்டல அலுவலர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி உள்ளிட்ட வாக்குச்சாவடி பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
அவை அனைத்தும் மினி லாரிகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.
மேலும் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவத்தினர் இணைந்து செயல்படுவார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்கு நேற்று மினிலாரிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
227 போலீஸ் குழுக்கள்
இந்த மினிலாரிகள் ஒவ்வொன்றிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்கு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 முதல் 30 போலீசார் கொண்ட 227 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுவினர் இன்று (திங்கட்கிழமை) மண்டல அலுவலர்களுடன் இணைந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்கின்றனர்.
இதில் திண்டுக்கல், நத்தம், ஆத்தூர் தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தனர்.
அங்கு போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினார்.
பின்னர் போலீசாருக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்வதற்காக வாகனங்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பாதுகாப்பு
இதேபோல் ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூர், நிலக்கோட்டை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட போலீஸ் குழுக்களிடம் அந்தந்த பகுதிகளுக்கான வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இந்த குழுக்கள் மண்டல அலுவலர்களுடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் பாதுகாப்பு பணிக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான போலீசார் திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தனர்.
அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு பணியிடம் ஒதுக்கப்பட்டது.
Related Tags :
Next Story