வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல்


வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல்
x
தினத்தந்தி 5 April 2021 1:01 PM IST (Updated: 5 April 2021 1:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ’பூத் சிலிப்’ வழங்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் தலைவர் விகே சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் இல்ல முகவரியில் சசிகலாவுக்கு வாக்குரிமை இருந்துவந்தது. ஆனால், போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதால் வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

தற்போது சென்னை தி.நகர் இல்லத்தில் உள்ள முகவரியில் வசித்துவரும் சசிகலா அந்த முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயரை இணைக்க விண்ணப்பிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்துள்ள சசிகலா அரசியலில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story