இன்று வாக்குப்பதிவு: வாக்குச்சாவடியில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படும்? - தேர்தல் ஆணையம் விளக்கம்


இன்று வாக்குப்பதிவு: வாக்குச்சாவடியில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படும்? - தேர்தல் ஆணையம் விளக்கம்
x
தினத்தந்தி 6 April 2021 2:56 AM IST (Updated: 6 April 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பீதிக்கு மத்தியில் இன்று நடைபெற உள்ள வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடியில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படும்? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை, 

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த சில தேர்தல்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளில் இருந்து, முற்றிலும் மாறுபட்டதாக புதிய நடைமுறை இருக்கும். ஒருவரை ஒருவர் முகம் பார்த்து அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி முக கவசம் அணிந்தபடியும், முழு உடல் கவச உடை அணிந்தபடியும் தேர்தல் அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

நோய்த்தொற்று, தொற்றிக்கொள்ளாதவாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் வழக்கத்துக்கு மாறாக வாக்களிக்க செல்பவர்களின் நேரமும் அதிகரிக்கக்கூடும். ஆனாலும் கொரோனா பீதிக்கு இடையே ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பதற்காக இந்த புதிய அனுபவத்தை, பெறுவதற்கு வாக்காளர்களும் தயாராகிவிட்டனர். வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை அறிந்துகொள்வதிலும், வாக்காளர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர்.

வாக்காளர்கள் தங்கள் வாக்குப்பதிவு மையம் எது? என்பதை தேர்தல் ஆணைய இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்சு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி பாஸ்புக் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல மறக்கக்கூடாது. வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை என 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில் மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை பிரத்யேகமாக, கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள், கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரி, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றலாம். இந்த சமயத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகள் முழு உடல் கவச உடையை அணியவேண்டும். வாக்களிக்க வரும் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கும் முழு கவச உடை வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மருத்துவ கழிவுகளை போடுவதற்காக மஞ்சள் கலரில் 5 பைகள் மற்றும் மஞ்சள் கலரில் ஒரு குப்பை தொட்டியும் வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யும் கருவி, 500 மி.லி. கொள்ளளவு கொண்ட 7 கிருமிநாசினி பாட்டில், 100 மி.லி. கொள்ளளவு கொண்ட 11 கிருமிநாசினி பாட்டில், 11 முக கவசங்கள் (பேஸ் ஷீல்டு) மற்றும் இரண்டு அடுக்கு துணியிலான முக கவசங்கள் 30 வைக்கப்பட்டிருக்கும்.

வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணியவேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்கும்போது, வாக்குச்சாவடியில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படும்? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* வாக்களிக்க வரும் வாக்காளர்கள் வலது கையில் அணிந்துகொள்வதற்காக, தேர்தல் அதிகாரிகள் ‘பாலித்தீன்' கையுறை கொடுப்பார்கள். வாக்காளர்கள் தாங்களே கையுறையையும் கொண்டு வரலாம்.

* வாக்குச்சாவடிக்குள் அனுமதிப்பதற்கு முன்பு வாக்காளர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். அனுமதிக்கப்பட்ட அளவு உடல் வெப்பம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அனுமதிக்கப்பட்ட அளவையும் தாண்டி உடல் வெப்பம் இருந்தால், கொரோனா தொற்று, கொரோனா அறிகுறி உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம்.

* உடல் வெப்ப பரிசோதனையை முடித்த பின்னர், வாக்காளர்களின் கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். இதையடுத்து உள்ளே வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

* வாக்குச்சாவடி அதிகாரி, வாக்காளரின் அடையாள எண்ணை, வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பார். இதையடுத்து அடையாளப்படுத்துவதற்கு வசதியாக வாக்காளர்கள் தங்களுடைய முக கவசத்தை லேசாக கீழே இறக்க வேண்டும்.

கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம்

* வாக்காளரின் விரல் நகத்தில் அழியாத மையை மற்றொரு வாக்குச்சாவடி அதிகாரி இடுவார். தொடர்ந்து வாக்களிப்பதற்கான ரசீதினையும் கொடுப்பார்.

* இன்னொரு வாக்குச்சாவடி அதிகாரி ரசீதை எடுத்துக்கொண்டு, வாக்காளரின் விரலில் இடப்பட்ட மையை பரிசோதித்துவிட்டு, வாக்காளரை வாக்குப்பதிவு செய்வதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் இருக்கும் இடத்துக்கு செல்ல அனுமதிப்பார். வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘பீப்' என்ற சத்தத்துடன் சிவப்பு நிறத்தில் ஒளிரும் விளக்கு எரிந்தால் வாக்கு, பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

* வாக்களித்த பிறகு வாக்காளர்கள் தங்கள் கையுறையை கழற்றி, வாக்குச்சாவடியில் உள்ள குப்பைத் தொட்டியில் போடவேண்டும். வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறும் முன்பு கைகளை கிருமிநாசினியால் சுத்தம் செய்யவேண்டும்.

* மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா தொற்று உள்ளவர்கள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், கொரோனா அறிகுறி இருப்பவர்கள் வாக்களிக்கலாம்.

மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.

Next Story