தமிழக சட்டப்பேரவை தேர்தல்: இதுவரை 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன - சத்யபிரதா சாகு தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 April 2021 5:28 PM IST (Updated: 6 April 2021 5:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 134 கட்டுப்பாட்டு கருவிகளும் மாற்றப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்து வருகிறது. மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3-ம் பாலினத்தவர் 7192 பேர் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்த வாக்களித்து வருகின்றனர்.

முதல் முறை வாக்காளர்கள், முதியவர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் உற்சாகமாக வாகக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என முக்கிய விஐபிகள் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தின் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவ்வப்போது வாக்குப்பதிவு தடைபட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 174 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 134 கட்டுப்பாடு யூனிட்கள், 559 விவிபாட் இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Next Story