மேற்கு வங்கம் : பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை


மேற்கு வங்கம் : பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
x
தினத்தந்தி 13 April 2021 7:13 AM GMT (Updated: 13 April 2021 7:13 AM GMT)

மேற்கு வங்கம் பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கம்,

மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானவுடனே மாநிலத்தில் போட்டிக்களம் அதிரத்தொடங்கியது. அரசியல் கட்சிகள் 3 பிரதான அணிகளாக பிரிந்து கோதாவில் குதித்தன. இதில் முக்கியமாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜனதா தலைமையிலான அணி ஒன்றும், இடதுசாரி-காங்கிரஸ் இணைந்த மற்றொரு அணியுமாக 3 பிரதான அணிகள் களத்தில் இருக்கின்றன. 

இப்படி 3 பிரதான அணிகள் இருந்தாலும் போட்டி என்னவோ, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும் இடையேதான். இதற்காக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட மத்திய மந்திரிகள், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிற மாநில முதல்-மந்திரிகள் என பெரும்படையே மேற்கு வங்காளத்தில் முகாமிட்டு இருக்கிறது.

அதேநேரம் மம்தா பானர்ஜியும், கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.பி., எம்.எல். ஏ.க்களுடன் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இப்படி இரு கட்சிகளுக்கு இடையேயான இந்த வைராக்கியம் தேர்தல் பிரசார களத்தில் பலமாக எதிரொலித்து வருகிறது. இருதரப்பும் மக்களுக்கு நல்ல திட்டங்களை அறிவிக்கிறார்களோ இ்ல்லையோ, ஒருவரையொருவர் வசைபாடுவதையும், ஆத்திரமூட்டும் வார்த்தைகளை பயன்படுத்துவதையும் குறையின்றி செய்து வருகின்றனர்.

இவ்வாறு  தேர்தல்களம் அனல் பறக்கும் நிலையில், அங்கு 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ளன. இதில் கடந்த 10-ந்தேதி நடந்த 4-வது கட்ட வாக்குப்பதிவில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கூச்பெஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் வாக்குச்சாவடி ஒன்றில் மத்தியப்படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினரை முற்றுகையிட்டு அவர்களது துப்பாக்கிகளை பறிக்க முயன்றதால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிட்டால்குச்சியில் மற்றொரு வாக்குச்சாவடியில் பா.ஜனதா தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். அவரை திரிணாமுல் காங்கிரசார் கொன்றுவிட்டதாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சிட்டால்குச்சியில் குறைந்தது 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இன்று முதல் நாளை மறுநாள் 12 மணி வரை பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.

Next Story