நந்திகிராம் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் - மம்தா பானர்ஜி


நந்திகிராம் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 2 May 2021 7:16 PM IST (Updated: 2 May 2021 7:16 PM IST)
t-max-icont-min-icon

நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகள் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. மற்றவை 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

இதற்கிடையில், இத்தேர்தலில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டார். நந்திகிராமில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

அதில் மம்தா பானர்ஜி - சுவேந்து அதிகாரி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பல கட்ட வாக்கு எண்னிக்கைக்கு பிறகும் தொடர்ந்து இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான வாக்குவித்தியாசம் மிகக்குறைவான அளவிலேயே உள்ளதால் யார் வெற்றி பெறுவார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் மாலை 6.55 மணிக்கு வெளியிட்ட தகவலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் 62 ஆயிரத்து 677 வாக்குகள் பெற்றுள்ளதாகவும், திரிணாமுல் வேட்பாளர் மம்தா பானர்ஜி 52 ஆயிரத்து 815 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மம்தா பாஜக வேட்பாளரை விட 9 ஆயிரத்து 862 வாக்குகள் பின் தங்கிய நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை விவரங்களை தங்கள் இணையதளத்தில் மிகவும் காலதாமதமாக பதிவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேவேளை, ஆங்கில செய்தி ஊடகமான ’இந்தியா டுடே’ நந்திகிராமில் 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது. 

பல்வேறு மேற்குவங்காள உள்ளூர் ஊடகங்களும் நந்திகிராம் தொகுதி தொடர்பாக இரு வேறு வாக்குஎண்ணிக்கை விவரங்களை வெளியிட்டு வருகின்றன. இதனால் நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், 213 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதி நிலவரம் குறித்து கருத்து தெரிவித்தார். 

அவர் கூறுகையில், நந்திகிராமை பற்றி கவலைப்படவேண்டாம். ஒரு இயக்கத்தை எதிர்த்து நான் போராடியதால் நான் நந்திகிராமில் சிரமப்பட்டுள்ளேன். அது ஒன்றுமில்லை. நந்திகிராம் மக்கள் எந்த தீர்ப்பு வழங்கினாலும் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். நாங்கள் 221-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டோம். தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிட்டது’ என்றார்.

மம்தாவின் பேச்சு நந்திகிராமில் அவர் தோல்வியை சந்திக்கும் சூழ்நிலையில் உள்ளார் என்பதை வெளிக்காட்டும் வகையில் உள்ளதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Next Story