'மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா பரவலை தடுத்திட உதவிட வேண்டும்'- முக ஸ்டாலின் வேண்டுகோள்


மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா பரவலை தடுத்திட உதவிட வேண்டும்- முக ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 May 2021 3:23 PM GMT (Updated: 3 May 2021 3:23 PM GMT)

மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா நோய் பரவலை தடுத்திட உதவிட வேண்டும் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 28 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 258 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 16 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரேநாளில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திமுக தலைவர் முக ஸ்டாலின் வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா பரவல் தொடர்பாக மாநில தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர், தலைமை செயலாளருடனான ஆலோசனைக்கு பின் தமிழக மக்களுக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ள முக ஸ்டாலின் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், ‘மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா நோய் பரவலை தடுத்திட உதவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் முழுமுனைப்புடன் நடைபெற்றிட வலியுறுத்தினேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நோய்ப்பரவலைத் தடுத்திட உதவ வேண்டும்’ என்றார்.

Next Story