ஈரான் நாட்டில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 63 பேர் பலி


ஈரான் நாட்டில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 63 பேர் பலி
x
தினத்தந்தி 11 March 2020 11:55 AM GMT (Updated: 2020-03-11T17:25:06+05:30)

ஈரான் நாட்டில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் இன்று 63 பேர் பலியாகி உள்ளனர்.

தெஹ்ரான்,

சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகின் 104 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,158 ஆக உள்ளது.  உலக அளவில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கு கூடுதலாக சென்று விட்டது.  இதேபோன்று உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் கூடுதலாக உள்ளது.  தொடர்ந்து பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்து இத்தாலி, தென்கொரியா  மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  ஈரானின் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.

ஈரானில் கடந்த 7ந்தேதி ஒரே நாளில் 21 பேர் பலியாகினர்.  1,076 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  இதனால் பலி எண்ணிக்கை 145 ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது.  பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 8ந்தேதி ஒரே நாளில் 49 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியானது அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.  இதனால் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.

வைரஸ் பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது என ஈரான் நாட்டு அரசு சார்பில் கூறப்பட்டு வருகிறது.  எனினும், வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் கடந்த 9ந்தேதி 43 பேர் உயிரிழந்தனர்.  இதனால் பலி எண்ணிக்கை 237 ஆக உயர்வடைந்து இருந்தது.  இந்நிலையில், வைரஸ் பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 54 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வடைந்தது.  பாதிப்படைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,042 ஆக உயர்ந்தது.

தொடர்ந்து பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று ஈரானில் ஒரே நாளில் 63 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 354 ஆக உயர்ந்து உள்ளது.  இதேபோன்று 958 பேருக்கு இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரம் என்ற அளவில் உள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பினை தொடர்ந்து ஈரானில் பள்ளி கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு உள்ளன.

Next Story