கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: ஆஸ்திரேலியா மந்திரியையும் தாக்கியது


கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: ஆஸ்திரேலியா மந்திரியையும் தாக்கியது
x
தினத்தந்தி 13 March 2020 3:19 AM GMT (Updated: 13 March 2020 11:51 PM GMT)

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஆஸ்திரேலியா மந்திரியையும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது.

ஒட்டாவா,

சீனாவில் உருவான உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4,900 பேர் பலியாகி இருக்கிறார்கள். 116 நாடுகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனா இந்த கொடிய வைரசின் தாக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டும் வரும் நிலையில் கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பல நாடுகளில் மந்திரிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகர், சுகாதாரத்துறை மந்திரி ராஜ் ஹரிர்சி மற்றும் இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி நாடின் டோரிஸ் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரேகோயருக்கு (வயது 44) கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய சோபிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சோபி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

அவருக்கு நோய் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்றும், எனினும் அடுத்த 14 நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை மேற்கொள்வார் என்றும், கனடாவில் கொரோனா வைரசின் தாக்கம் குறித்து இன்று (சனிக்கிழமை) அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டே உள்ளிட்ட உலக தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக ஜஸ்டின் ட்ரூடோ தீவிர ஆலோசனை நடத்தினார்.

அதே போல் கனடாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக மந்திரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் பேசினார்.

இதற்கிடையில் ஆஸ்திரேலிய உள்துறை மந்திரி பீட்டர் டுட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அதிகாலை தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தபோது காய்ச்சலும், தொண்டை வறட்சியும் இருப்பதை உணர்ந்தேன். இதையடுத்து குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். அதன் பின்னர் எனக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் எனக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

தற்போது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் அடுத்தகட்ட நிலை குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story