சிறை வன்முறையை தொடர்ந்து 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈகுவடார் அரசு முடிவு


சிறை வன்முறையை தொடர்ந்து 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஈகுவடார் அரசு முடிவு
x
தினத்தந்தி 2 Oct 2021 12:23 AM GMT (Updated: 2 Oct 2021 12:23 AM GMT)

ஈகுவடாரில் உள்ள சிறையில் கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட வன்முறையில் 118 பேர் உயிரிழந்தனர்.

குயிட்டோ,

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவ்வப்போது கோஷ்டி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், குயாகுவில் சிறைச்சாலையில் கடந்த செவ்வாய்கிழமை இருதரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 118 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 79 கைதிகள் படுகாயமடைந்தனர்.

ஈகுவடாரில் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 39 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டதாலும், கைதிகளை கண்காணிக்க போதிய அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததும் இதுபோன்ற மோதல்கள் வன்முறையில் முடிய காரணமாகியுள்ளது.

இந்நிலையில், சிறையில் உள்ள 2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஈகுவடார் அரசு முடிவு செய்துள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் 2 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரித்து, மோதல்களை தவிர்க்கலாம் என்ற நோக்கத்தோடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

Next Story