ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டு கொலை; தலீபான் அமைப்பு அதிரடி


ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டு கொலை; தலீபான் அமைப்பு அதிரடி
x
தினத்தந்தி 3 Oct 2021 9:25 PM GMT (Updated: 3 Oct 2021 9:25 PM GMT)

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை தலீபான் அமைப்பினர் சுட்டு கொன்றுள்ளனர்.


காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வந்ததுடன், தலீபான் அமைப்புகள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.  கடந்த ஆகஸ்டு மத்தியில் பொறுப்பேற்ற பின்பு, அந்நாட்டில் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா என்ற மசூதியில் திடீரென நேற்று குண்டுவெடிப்பு ஒன்று நடந்துள்ளது.  இதில், 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  32 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி காரி சயீத் கோஸ்டி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த நிலையில், நேற்று மாலை தலீபான் அமைப்பினர் டேயீஷ் எனப்படும் பயங்கரவாத அமைப்பினரின் பதுங்கு குழிகளின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில், டேயீஷ் போராளிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.  எனினும் அதுபற்றிய விரிவான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.




Next Story