வெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து 15 பேர் பலி


வெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து 15 பேர் பலி
x
தினத்தந்தி 22 Feb 2024 7:10 AM GMT (Updated: 22 Feb 2024 9:42 AM GMT)

தங்க சுரங்கத்தில் மேலும் சிலர் சிக்கியுள்ளதால் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மெக்சிகோ சிட்டி,

வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோத தங்க சுரங்கம் அமைந்துள்ளது. அந்த திறந்தவெளி தங்க சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு பாதி திடீரென இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் பல தொழிலாளிகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினார் தொழிலாளிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் சிலர் தங்க சுரங்கங்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் இன்னும் வெளியிடவில்லை.

வெனிசுலாவின் அரசாங்கம் கடந்த 2016ம் ஆண்டு எண்ணெய் தொழிற்துறையுடன் புதிய வருவாயைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரு பெரிய சுரங்க மேம்பாட்டு மண்டலத்தை நிறுவியது. இதனால் தங்கம், வைரங்கள், தாமிரம் மற்றும் பிற கனிமங்களுக்கான சுரங்க நடவடிக்கைகள் தொடங்கின.மேலும் அந்த மண்டலத்திற்கு வெளியே சட்டவிரோத சுரங்கங்கள் பெருகியது குறிப்பிடத்தக்கது.


Next Story