கலிபோர்னியாவை மேலும் 2 புயல்கள் தாக்க வாய்ய்பு: அதிகாரிகள் எச்சரிக்கை


கலிபோர்னியாவை மேலும் 2 புயல்கள் தாக்க வாய்ய்பு: அதிகாரிகள் எச்சரிக்கை
x

இன்னும் 2 புயல்கள் கலிபோர்னியா மற்றும் பசிபிக் வடமேற்கு பகுதியை பாதிக்ககூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குளிர்கால பருவத்தின்போது, கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் புயலானது பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றுள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீச்சும் ஏற்பட்டு மொத்தம் 19 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.

கலிபோர்னியாவில் கார்மெல் மற்றும் பெப்பிள் பீச் ஆகியவை மிக பெரிய சுற்றுலா தலங்களாக அறியப்படுகின்றன. இவற்றின் அருகேயுள்ள சாலினாஸ் ஆற்றில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பேராபத்து ஏற்பட கூடும். அதனால், சுற்றுலாவாசிகளுக்கு தடை விதிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த ஆற்றில் நேற்று அபாய அளவை கடந்து வெள்ளம் ஓடியது. இதனை தொடர்ந்து, அந்த ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 24 ஆயிரம் பேரை அதிகாரிகள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். புயல் பாதிப்புகளால் ஏற்பட்ட வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது. கட்டிடங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்துள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.

இதனால், குடியிருப்பில் உள்ள மக்கள் பாதுகாப்பு தேடி புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில், 2.2 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக பகுதிகள் மின் இணைப்பு இன்றி பாதிக்கப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான மக்கள் மின் வினியோகம் பாதித்து அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், இன்னும் 2 புயல்கள் கூடுதலாக கலிபோர்னியா மற்றும் பசிபிக் வடமேற்கு பகுதியை பாதிக்ககூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. எனினும், கடந்த 2 வாரங்களில் 7 பருவகால புயல்கள் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளன. நிலச்சரிவு, கடும் வெள்ளம் ஏற்பட கூடிய ஆபத்தும் உள்ளது என பொதுமக்களுக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.


Next Story