குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடக்கம்


குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 9 Feb 2018 1:29 AM GMT (Updated: 9 Feb 2018 1:29 AM GMT)

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் இன்று தொடங்கி வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. #WinterOlympics2018

பியாங்சாங்,

ஒலிம்பிக் போட்டி போல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. உறைபனியில் நடத்தப்படக்கூடிய விளையாட்டுகள் மட்டும் இந்த போட்டியில் அரங்கேறும். 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் ஐஸ் ஆக்கி, பனிச்சறுக்கு, ஸ்கேட்டிங் உள்பட 15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சிலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 92 நாடுகளை சேர்ந்த 2,952 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

தென்கொரியாவில் நடைபெறும் இந்த போட்டியில் அதன் எதிரி நாடான வடகொரியாவும் பங்கேற்கிறது. தொடக்க விழாவில் இரு அணிகளும் இணைந்து அணிவகுத்து செல்ல இருப்பது சிறப்பம்சமாகும். அத்துடன் ஐஸ் ஆக்கி பெண்கள் போட்டியில் இரு நாட்டு வீராங்கனைகளும் இணைந்து ஒரே அணியாக கொரியா என்ற பெயரில் களம் இறங்குகிறார்கள். தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது இது முதல்முறையாகும். 1988-ம் ஆண்டில் தென்கொரியா தலைநகர் சியோலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று இருந்தது.

போட்டியை நடத்தும் தென்கொரியா அணியில் 122 வீரர்-வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கா, வடகொரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் போட்டி நடைபெறும் இடம் மற்றும் வீரர்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்துக்கு பலத்த பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது. #WinterOlympics2018 


Next Story