மைக்கேல் ஜாக்சனின் 45 டிகிரி கோண நடன அசைவின் ரகசியம் வெளியானது


மைக்கேல் ஜாக்சனின் 45 டிகிரி  கோண நடன அசைவின் ரகசியம் வெளியானது
x
தினத்தந்தி 23 May 2018 10:22 AM GMT (Updated: 23 May 2018 10:22 AM GMT)

மைக்கேல் ஜாக்சன் கீழே விழாமல் 45 டிகிரி கோண நடன அசைவின் ரகசியம் வெளியாகி உள்ளது

1987இல் வெளியான அந்த இசைத் தொகுப்பில் கீழே விழாமல், 45 டிகிரி கோணத்தில் தனது உடலை நேர்கோட்டில் சாய்த்து நடனமாடினார் மைக்கேல் ஜாக்சன். இது ரசிகர்கள் மத்தியில் கவரப்பட்டு, அவர்களும் இதுபோன்ற நடனமாட ஆரம்பித்தனர்.

மைக்கேல் ஜாக்சன் எப்படி கீழே விழாமல் நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார் என்பதற்கு நரம்பியல் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த மஞ்சுல் திரிபாதி மற்றும் குழுவினர் இது குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை ஜர்னல் ஆஃப் நியூரோசர்ஜரி எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.

அதில்,  மைக்கேல் ஜாக்சன் போன்ற திறமையும் வலிமையையும் உள்ளவர்களால் கூட ஒரு குறிப்பிட்ட அளவுதான் முன்னோக்கி நேராக சாய முடியும் என்கிறார் உதவிப் பேராசிரியர் மஞ்சுல். எனினும், அவரால் இன்னும் கூடுதலாக சாய முடிந்ததன் காரணம் அதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காலணிகளே என்கிறார் மருத்துவர் மஞ்சுல். அவரது காலனிகளின் கீழ் பகுதியில் 'V' வடிவத்தில் ஒரு விரிசல் உண்டாக்கப்பட்டிருந்தது. அதில் தடுப்பாக கீழ் நோக்கி ஒரு ஆணி சொருகப்பட்டிருக்கும். மைக்கேல் ஜாக்சன் முன்னோக்கி சரியும் போது, அந்த ஆணி தரையை நோக்கி கீழே சென்று, தளத்துடன் இறுக்கப் பற்றிக்கொள்ளும். அது மைக்கேல் ஜாக்சனுக்கு கூடுதல் வலுவை கொடுத்துள்ளது.

காப்புரிமை பெறப்பட்ட இந்த காலணி கண்டுபிடிக்கப்படும் முன்பு, தனது இடுப்பைச் சுற்றி கச்சை ஒன்றைக் கட்டிக்கொண்டு ஒரு கயிற்றின் உதவியுடன் மைக்கேல் அந்த நடன அசைவை ஆடியுள்ளார். காலணிகள் உதவி இருந்தாலும் அந்த நடன அசைவுக்கு அதீத உடல் வலிமை தேவை இதில் கணுக்காலில் காயம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதைச் செய்வது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல என்கிறார் மருத்துவர் மஞ்சுல்.


Next Story