அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
* ஆப்கானிஸ்தானில் ஜாபூல் மாகாணத்தில், காபூல்-காந்தஹார் நெடுஞ்சாலையில் தலீபான்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் கடுமையான துப்பாக்கிச்சண்டை நேற்று முன்தினம் நடந்தது. இதில் ராணுவ வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை ஜாபூல் மாகாண அதிகாரிகள் உறுதி செய்தனர். தலீபான்கள் தரப்பிலும் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதுபற்றிய விவரம் வெளியாக வில்லை.
* அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது அங்கு அமைந்துள்ள அந்த நாட்டின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனின் நினைவுச்சின்னம் மீது மின்னல் தாக்கியது. இதில் அங்கு பணியில் இருந்த தேசிய பாதுகாப்பு படையினர் 2 பேர் காயம் அடைந்தனர்.
* முக கவசம் அணியாமலும், வெப்ப நிலை சோதித்துக்கொள்ளாமலும், கிருமிநாசினி சுரங்கத்தின் வழியாக நுழைந்து வராமலும் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டுக்குள் யாரும் வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
* இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான பொது முடக்க காலத்தில் ஷவுட் 85258 என்ற எண் மூலமாக தொடர்பு கொள்கிற, நெருக்கடியில் உள்ள மக்களுக்கு ஆலோசனை அளிப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். ஆனால் தங்களுடன் பேசுவது இளவரசர் வில்லியம் என்பது மக்களுக்கு தெரியாது.
* அமெரிக்காவில் போலீஸ் பிடியில் கருப்பு இனத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை கண்டித்து ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வார இறுதியில் அங்குள்ள கருப்பு இனத்தவர் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். ஆனால் அதற்கு அந்த நாட்டு கோர்ட்டு தடை விதித்து விட்டது.
* பிரெஞ்சு-ஈரானிய கல்வியாளர் பரிபா அடெல்கா, தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டில் ஈரான் நாட்டில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஈரான் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
* கிரீஸ் நாட்டில் கொரோனா வைரஸ் காலத்தில் மக்கள் யோகா பயிற்சியில் ஈடுபடுவது நல்லது என ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருச்சபை, கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் யோகாவுக்கு இடம் இல்லை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story