ரஷியாவில் 2036 வரை புதின் ஆட்சி: பொதுவாக்கெடுப்பில் மக்கள் அமோக ஆதரவு


ரஷியாவில் 2036 வரை புதின் ஆட்சி: பொதுவாக்கெடுப்பில் மக்கள் அமோக ஆதரவு
x
தினத்தந்தி 3 July 2020 5:54 AM IST (Updated: 3 July 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் அமோக ஆதரவால் ரஷியாவில் 2036-ம் ஆண்டு வரை புதின் அதிபராக இருந்து ஆட்சி நடத்த வழிபிறந்துள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவில் அதிபர் விளாடிமிர் புதினின் 6 ஆண்டு ஆட்சிக்காலம் 2024-ம் ஆண்டு முடிவு அடைய இருந்தது. இந்த நிலையில் அவரது ஆட்சிக்காலத்தை மேலும் 12 ஆண்டுகள் (2036 வரை) நீட்டிக்க வகை செய்தும், பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தும், அந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டது.

புதிய அரசியல் சாசனம் அங்குள்ள புத்தக கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. ஆனாலும் பொதுமக்களின் ஒப்புதலை பெறுவது அவசியம் என்று புதின் திட்டவட்டமாக கூறி விட்டார்.

அதைத் தொடர்ந்து இந்த திருத்தங்களுக்கு பொதுமக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி பொதுவாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுவாக்கெடுப்பு தள்ளி போடப்பட்டு, இப்போது நடந்து முடிந்துள்ளது.

7 நாட்கள் நடந்த பொதுவாக்கெடுப்பில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. 30 வாக்குச்சாவடிகள் அறிக்கை அளித்துள்ள நிலையில், 74 சதவீத வாக்காளர்கள் புதிய சீர்திருத்தங்களை ஆதரித்துள்ளதாக அந்த நாட்டின் மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

மக்களின் அமோக ஆதரவால் ரஷியாவில் 2036-ம் ஆண்டு வரை புதின் அதிபராக இருந்து ஆட்சி நடத்த வழிபிறந்துள்ளது. புதின் இன்றி ரஷியா இல்லை என்பது மக்கள் அளித்துள்ள ஆதரவால் நிரூபணம் ஆகி உள்ளது.

அரசியல் சாசன சட்ட திருத்தமானது உத்தரவாதம் அளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓரின சேர்க்கை திருமணத்துக்கு தடை போன்றவற்றுக்கும் வழிவகை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story