இலங்கை துறைமுக கடற்கரை பகுதியில் மூழ்கும் நிலையில் தீ பிடித்த ரசாயன கப்பல் ; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து


Image courtesy : BBC.com
x
Image courtesy : BBC.com
தினத்தந்தி 2 Jun 2021 11:08 AM GMT (Updated: 2 Jun 2021 11:08 AM GMT)

கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து அதன் தற்போதைய நிலையில் மூழ்கினால் அது கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தும்

கொழும்பு: 

இலங்கை அருகே சரக்கு கப்பலில் பல நாட்களாக எரிந்து வந்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தீ விபத்தினால் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணியில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

இந்தியாவின் ஹசேரா துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற யம்பு எக்ஸ்பிரஸ் கப்பலில் கடந்த மாதம் தீ பரவியது. கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில், 9.5 கடல் மைல் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கப்பலில் பற்றிய தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது. கப்பலில் எத்தனால், 25 டன் நைட்ரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் இருந்ததால் கப்பலில் பற்றிய தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. 

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-பிரஸ் முத்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தீப்பிடித்து எரிந்து வந்தது. மேலும் கப்பலும் மூழ்கும் நிலைக்கு சென்றது. இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் கடந்த நாட்களில் கூட்டாக இணைந்து தீயை அணைக்கும் மற்றும் கப்பல் உடைந்து மூழ்குவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

கொழும்பு துறைமுகத்திலிருந்து அதன் தற்போதைய நிலையில் மூழ்கினால் அது கடுமையான மாசுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் நிபுணர்கள் கப்பலை வெகுதூரம் வெளியே  கடலுக்கு இழுக்க முயன்றுய் வருவதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் இந்திகா டி சில்வா தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடற்கரையில் இருந்து  சுமார் 80 கிலோமீட்டர் (50 மைல்) தொலைவில் மீன்பிடிக்க தடை அதிகாரிகள் மீண்டும் விதித்து உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் சரக்கு கப்பலில் பல நாட்களாக எரிந்து வந்த தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கப்பலில் மாலுமி உட்பட மூவரையும், இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து, கப்பல் தீ விபத்தினால் அதிலிருந்து வெளியேறிய பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் கடற்கரை பகுதிகளில் ஒதுங்கியுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் ராணுவம் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

சுற்றுச்சூழல் நிபுணர் டாக்டர் அஜந்தா பெரேரா பிபிசியிடம் கூறும் போது இந்த கப்பல் மூழ்கினால் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தும்

 நைட்ரிக் அமிலம் மற்றும் கப்பலில் உள்ள எண்ணெய் ஆகியவை மூழ்கினால் அது கடலின் முழு அடிப்பகுதியையும் அழித்துவிடும்" என்று அவர் கூறினார்.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு கப்பலை அங்கிருந்து வெளியேற கத்தார் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும்  அனுமதி மறுத்துவிட்டது. மற்ற இரு நாடுகளால் நிராகரிக்கப்பட்ட பின்னர் இலங்கை கப்பலை அதன் கடலுக்குள் நுழைய அனுமதித்து உள்ளது.

Next Story