உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜின்ஜியாங்கில் சீனா மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறது: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு


உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜின்ஜியாங்கில் சீனா மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறது: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Jun 2021 7:39 PM GMT (Updated: 11 Jun 2021 7:39 PM GMT)

உய்குர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனா மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

உய்குர் இனத்தை அழிக்க முயற்சி
சீனாவின் வடக்கு பகுதியில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் பிராந்தியத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். சீனா, இந்த உய்குர் முஸ்லிம் இனத்தை அழிப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.உய்குர் முஸ்லிம் மக்களை தீவிரமாகக் கண்காணிப்பது, சித்ரவதை செய்வது, காரணமின்றி முகாம்களில் அடைப்பது போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களில் சீனா ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுக்கிறது.

‘அம்னெஸ்டி’ விசாரணை நடத்தி அறிக்கை
மேலும் உய்குர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது பயங்கரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கை என்றும் அந்த முகாம்கள் உய்குர் முஸ்லிம் மக்களுக்கு திறன்களை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிகளை வழங்கும் பயிற்சி மையங்கள் என்றும் சீனா கூறுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘அம்னெஸ்டி' ஜின்ஜியாங் மாகாணத்தில் நடப்பதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறி...
அந்த அறிக்கையில் ஜின்ஜியாங் மாகாணத்தில் சீன அரசு மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதுபற்றி ஐ.நா. தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 முன்னாள் கைதிகள் உடனான நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள 160 பக்க அறிக்கையில் ‘‘சர்வதேச சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறி சிறைவாசம், சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் போன்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் சீன அரசு ஈடுபட்டதற்கான சான்றுகள் உள்ளன’’ என கூறப்பட்டுள்ளது.

கலாசார நடைமுறைகளை வேரறுக்கும் நோக்கம்
மேலும் அதில் ‘‘சீன அரசின் நடவடிக்கைகள் ஜின்ஜியாங்கின் மக்கள் தொகையில் ஒரு பகுதியை கூட்டாக மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் குறி வைப்பதற்கும், கடுமையான வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை 
பயன்படுத்துவதற்கும், முஸ்லிம் மத நம்பிக்கைகள் மற்றும் இன கலாசார நடைமுறைகளை வேரறுக்கவும் தெளிவான நோக்கத்தை காட்டியுள்ளன’’ எனவும் கூறப்பட்டுள்ளது. ‘அம்னெஸ்டி' சர்வதேச அமைப்பின் பொதுச்செயலாளர் அக்னஸ் கல்லாமார்ட் இதுபற்றி கூறுகையில் ‘‘ஜின்ஜியாங் மாகாணத்தில் சீன அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் நரக காட்சிகளை உருவாக்குகின்றனர். தடுப்பு முகாம்களில் ஏராளமான மக்கள் மூளைச்சலவை, சித்திரவதை மற்றும் பிற இழிவான செயல்களுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கோடிக்கணக்கான மக்கள் ஒரு பரந்த கண்காணிப்பு எந்திரத்தின் மத்தியில் அச்சத்துடன் வாழ்கின்றனர்’’ எனக் கூறினார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் மீது குற்றச்சாட்டு
மேலும் இந்த விவகாரத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தனது அதிகாரத்தின் படி செயல்பட தவறிவிட்டதாக அக்னஸ் கல்லாமார்ட் குற்றம் சாட்டினார். இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘ஆன்டனியோ குட்டரெஸ், நிலைமையை கண்டிக்கவில்லை அவர் சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஐ.நா. சபையால் நிறுவப்பட்ட மதிப்புகளை பாதுகாப்பது அவரின் பொறுப்பாகும். நிச்சயமாக மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னால் அமைதியாக இருக்கக் கூடாது’’ என கூறினார்.

Next Story