கனடாவில் பள்ளிக்கூடம் அருகே 200 கல்லறைகள் கண்டுபிடிப்பு


கனடாவில் பள்ளிக்கூடம் அருகே 200 கல்லறைகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 1 July 2021 7:16 PM GMT (Updated: 2021-07-02T00:46:48+05:30)

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் செயல்பட்ட செயின்ட் யூஜின்ஸ் என்ற உறைவிட பள்ளி அருகே 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இந்த கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள், அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் உடல்களா என்ற சந்தேகம் எழுந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விசாரணை நடப்பதால் மேலும் கல்லறைகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உள்ளூர் தலைவர்கள் தெரிவித்தனர். செயின்ட் யூஜின்ஸ் என்ற அந்த பள்ளிக்கூடம், கத்தோலிக்க திருச்சபையால் தோற்றுவிக்கப்பட்டு 1912 முதல் 1970-களின் தொடக்கம்வரையில் இயங்கி உள்ளது.

கடந்த மே மாதம் இதே பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில், காம்லூப்ஸ் என்ற இடத்தில் 215 பழங்குடி குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சஸ்காட் செவனில் மற்றொரு பள்ளியின் இடத்தில் 751 பேரது உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் எனவும் கோவெஸ் பர்ஸ்ட் நேஷன் என்ற அமைப்பின் தலைவர்கள் கடந்த வாரம் கூறினர்.இப்படி கனடாவில் தொடர்ந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்படுவது அந்த நாட்டை உலுக்கி உள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவிக்கையில், “பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் வரலாற்றுஅநீதிகளையும், நடைபெற்றுக்கொண்டிருக்கிற அநீதிகளையும் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது” என கூறினார்.

Next Story