ஒமைக்ரான் பாதிப்பு; இஸ்ரேலின் சிவப்பு நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து, பெல்ஜியம்


ஒமைக்ரான் பாதிப்பு; இஸ்ரேலின் சிவப்பு நாடுகள் பட்டியலில் இங்கிலாந்து, பெல்ஜியம்
x
தினத்தந்தி 12 Dec 2021 9:18 PM GMT (Updated: 12 Dec 2021 9:18 PM GMT)

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்புகளால் இங்கிலாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு இஸ்ரேல் நாடு பயண தடை விதித்து உள்ளது.


டெல் அவிவ்,

ஒமைக்ரான் அச்சுறுத்தலை முன்னிட்டு முதல் நாடாக இஸ்ரேல் அனைத்து வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதித்து தனது நாட்டு எல்லையை கடந்த வாரம் மூடியது.  ஒமைக்ரான் அச்சுறுத்தல் முழுவதுமாக நீங்காத நிலையில், வெளிநாட்டு பயணிகள் வருகைக்கான தடை மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் 22ந்தேதி வரை இந்த பயண தடையை நீட்டித்து இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  தற்போது உள்ள பயண கட்டுப்பாடுகளின்படி, வெளிநாட்டில் இருந்து இஸ்ரேல் திரும்பும் சொந்த நாட்டு மக்கள்,  கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுகள் வெளிவரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 
ஒமைக்ரான் பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் இஸ்ரேல் நாட்டு மக்கள், அரசு ஏற்பாடு செய்துள்ள ஓட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் இதுவரை 55 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  93 லட்சம் மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலில், கொரோனா பெருந்தொற்றுக்கு இதுவரை 8,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 63 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவை சேர்ந்த 50 நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளன.  இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் உள்ள நாடுகளான இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேல் நாடு பயண தடை விதித்து உள்ளது.

இதனால் சிறப்பு அனுமதி இன்றி, அந்த நாடுகளுக்கு இஸ்ரேல் நாட்டு மக்கள் செல்ல முடியாது.  இந்த நாடுகள் இஸ்ரேலின் சிவப்பு பட்டியலில் வைக்கப்படும்.  பயண தடையும் விதிக்கப்படும்.  இந்த நாடுகளுக்கு சென்று திரும்புபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.  இந்த புதிய நாடுகள் அனைத்தும் 72 மணிநேரத்திற்குள் பயண தடைக்கான நாடுகள் அடங்கிய பட்டியலில் சேர்க்கப்படும்.


Next Story