கொலம்பியா: விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு - 2 போலீசார் பலி


கொலம்பியா: விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு - 2 போலீசார் பலி
x
தினத்தந்தி 15 Dec 2021 5:04 AM GMT (Updated: 15 Dec 2021 5:04 AM GMT)

கொலம்பியாவில் விமானத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர்.

பொகொடா,

தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அந்நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. போதைப்பொருள் கடத்தலை தடுக்க கொலம்பிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அதேபோல், கொலம்பியா நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அண்டை நாடான வெனிசுலாவின் ஆதரவுடன் தேசிய விடுதலை ராணுவம் மற்றும் கொலம்பியா புரட்சிகர ராணுவம் ஆகிய இரு கிளர்ச்சி அமைப்புகள் கொலம்பியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பை கொலம்பியா பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பல், பயங்கரவாத கும்பல்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், கொலம்பியாவின் குகுடா நகரில் உள்ள ஹமிலோ டாசா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்திற்குள் நேற்று இரவு வெடிகுண்டை தனது உடலில் கட்டிக்கொண்டு பயங்கரவாதி நுழைந்துள்ளான். விமானம் நின்றுகொண்டிருந்த பகுதிக்குள் நுழைவதற்கு முன்பே ஓடுதளத்திலேயே அந்த பயங்கரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அந்த பயங்கரவாதி உடல் சிதறி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, விமான நிலையம் அருகே கிடந்த ஒரு பெட்டியை கண்டுபிடித்தனர். 

இதை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்துகொண்டிருந்தபோது அந்த பெட்டி திடீரென வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் 2 போலீசார் உயிரிழந்தனர். இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story