ஜனவரியில் ஒமைக்ரான் அலையா? நிபுணர் பரபரப்பு தகவல்


ஜனவரியில் ஒமைக்ரான் அலையா? நிபுணர் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 18 Dec 2021 12:21 AM GMT (Updated: 18 Dec 2021 12:21 AM GMT)

ஜனவரியில் ஒமைக்ரான் அலை வீசக்கூடும் என தொற்று நோய் நிபுணர் டாக்டர் நரேஷ் புரோகித் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கொரோனா முடிவுக்கு வருமுன்னே அதன் திரிபான ஒமைக்ரான் அலற வைத்து இருப்பது மானுட சோகம்தான். கடந்த 24-ந் தேதி முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த ஒமைக்ரான் தென்படத்தொடங்கியது. இது 50-க்கும் மேற்பட்ட உரு மாற்றங்களை கொண்டிருக்கிறது, அதிபயங்கரமானது, நோய் எதிர்ப்பு திறனுக்கு தப்பிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது என்றெல்லாம் தகவல்கள் வந்தன.

உடனே உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு, ஜெனீவாவில் கூடி இந்த வைரஸ் பற்றி விவாதித்து, 26-ந் தேதியே இந்த வைரஸ், கவலைக்குரிய திரிபாக (விஓசி) அறிவிக்கப்பட்டது. இந்த ஒமைக்ரான், டெல்டா வைரசுடன் ஒப்பிடுகிறபோது 70 மடங்கு வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி ஒரு பக்கம் அதிர வைத்துள்ளன.

உலகமெங்கும் ஒமைக்ரான் வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இதற்கிடையே கேரளாவில் கோழிக்கோட்டில் அமைந்துள்ள கே.எம்.சி.டி. மருத்துவ கல்லூரியில் ஒமைக்ரான் பரவலை தடுக்கும் உத்திகள் பற்றி இணைய வழியில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பிரபல தொற்றுநோய் நிபுணரும், தேசிய தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகருமான டாக்டர் நரேஷ் புரோகித் வெளியிட்ட தகவல்கள்:-

* ஒமைக்ரான் பரவலின் வேகம், டெல்டாவை விட அதிகம்.

* டிசம்பர் 2-ந் தேதி இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு 2 பேருக்கு மட்டுமே இருந்தது. டிசம்பர் 14-ந் தேதி 45 பேருக்கு பாதிப்பு. 16-ந் தேதி 77 பேருக்கு பாதிப்பு. ஆக, 14 நாளில் 36 மடங்காக பெருகி உள்ளன.

ஜனவரியில் ஒமைக்ரான் அலை....

* ஜனவரியில் ஒமைக்ரான் அலை வீசக்கூடும்.

* ஒமைக்ரான் நோயாளி சூப்பர் ஸ்பிரடர் ஆக மாறி, ஒமைக்ரானை பரப்பலாம்.

* ஒமைக்ரான் ஏற்கனவே 77 நாடுகளுக்கு பயணித்திருக்கிறது. அதுவும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 3 வாரத்தில் இது நடந்திருக்கிறது.

* ஒமைக்ரான் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும்கூட, காட்டுத்தீ போல பரவுவது, உலகமெங்கும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு பெருத்த சவாலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. யாரும் ஒமைக்ரானை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

* இன்னும் ஏராளமானவர்களை தொற்றுவதின் மூலம் மிகக்கொடிய நோயாக மாறலாம், மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.

* ஒமைக்ரான் வைரஸ், கடந்த கால நோய்த்தொற்றின் மூலம் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச்சக்தி மற்றும் தடுப்பூசியால் கிடைத்த நோய்த்தொற்றுகளில் இருந்து தப்பிக்க முடியும். இதனால் ஒமைக்ரான் திரிபின் ஒட்டுமொத்த அச்சுறுத்தல் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story