இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Dec 2021 8:38 AM GMT (Updated: 21 Dec 2021 8:38 AM GMT)

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

லண்டன், 

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 12,133 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 101 ஆக அதிகரித்தது.

முன்னதாக சனிக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் புதிதாக 10,059 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 91,743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவா்களில் 12,133 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37,101 ஆக அதிகரித்திருந்தது.

இந்த சூழலில் கொரோனா மற்றும் அதன் புதிய வகையான ஒமைக்ரான் இரண்டுமே தீவிரமாக பரவி வருவதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அந்த நாட்டின் மந்திரி சபை அவசரமாக கூடி ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், தற்போது இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,044 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டநிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45,145 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 12 ஆக அதிகரித்துள்ளது. 

இதனிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவை வர இருப்பதால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story