இங்கிலாந்தில் தீவிரமாகும் ஒமைக்ரான்: ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Dec 2021 11:28 PM GMT (Updated: 21 Dec 2021 11:28 PM GMT)

சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ராணி 2-ம் எலிசபெத் ரத்துசெய்துள்ளார்.

லண்டன், 

இங்கிலாந்தில், உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், தனது வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளார்.

95 வயதான ராணி 2-ம் எலிசபெத் ஒவ்வொரும் ஆண்டும் சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் அரச குடும்பத்தினருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளின் போது ராணி 2-ம் எலிசபெத் உள்பட அரச குடும்பத்தினர் அனைவரும் செயின்ட் மேரிஸ் மாக்டலீன் தேவாலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு, பின்னர் மதிய உணவு மற்றும் பிற கொண்டாட்டங்களை சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில் ஒமைக்ரான் பரவலின் எதிரொலியாக சாண்ட்ரிங்ஹாம் அரண்மனையில் நடக்கும் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ராணி 2-ம் எலிசபெத் ரத்துசெய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக அவர் வின்ட்சர் கோட்டையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டும் கொரோனா வைரஸ் காரணமாக ராணி 2-ம் எலிசபெத் தனது பாரம்பரிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது.


Next Story