வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்பு - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வீனஸ் கிரகத்தில் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டன்,
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கார்டிஃப் மற்றும் எம்.ஐ.டி. ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், வீனஸ் கிரகத்தின் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். வீனஸ் கிரகம் பூமியில் இருந்து 47.34 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது. சூரியனில் இருந்து 2-வது கிரகமான வீனஸ், உயிர்கள் வாழ தகுதியற்ற கிரகமாக கருதப்படுகிறது.
அந்த கிரகத்தில் உள்ள மேகங்களில் கந்தக அமிலம் (Sulpuric acid) அதிக அளவில் காணப்படுகிறது. அத்தகைய சூழலில் உயிர்களால் பிழைத்திருக்க முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், வீனஸ் கிரகத்தில் உள்ள மேகங்களில் அம்மோனியா இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்துள்ளனர்.
மேலும் கந்தக அமிலம் நிறைந்த மேகங்களில் அம்மோனியா இருப்பதற்கு வேதியல் சான்றுகள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். இது குறித்து பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் வில்லியம் பெய்ன்ஸ் கூறுகையில், “வீனஸ் கிரகத்தில் அம்மோனியா இருப்பது உண்மையானால், அங்கு நிச்சயம் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று கூறினார்.
அதே சமயம் மின்னல் அல்லது எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை நிகழ்வுகளை விட, உயிரியல் ரீதியான வழிமுறைகளே வீனஸ் கிரகத்தில் அம்மோனியா உண்டாவதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அங்கு ஏற்கனவே ஹைட்ரஜன் வாயு உள்ளதால், பூமியில் உள்ளதைப் போன்ற நுண்ணுயிர்கள் வீனஸ் கிரகத்தில் கண்டறியப்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story