மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய நடிகருக்கு சிறை...


மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய நடிகருக்கு சிறை...
x
தினத்தந்தி 28 Dec 2021 7:23 PM GMT (Updated: 28 Dec 2021 7:23 PM GMT)

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய நடிகர் பெயிங் தகோனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நேபிடாவ்,

மியான்மரை சேர்ந்த பிரபல நடிகர் பெயிங் தகோன். மாடல், பாடகர் என பன்முக திறன் கொண்ட இவருக்கு அந்த நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், 24 வயதான பெயிங் தகோன் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணியில் பங்கேற்று வந்தார். அதோடு சமூக வலைத்தளம் வாயிலாக ராணுவ ஆட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் பெயிங் தகோன் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அவரை கைது செய்து குண்டு கட்டாக தூக்கி சென்றனர். மேலும் அவரது சமூக வலைளத்தள கணக்குகள் அனைத்தையும் ராணுவம் முடக்கியது. பெயிங் தகோன், மீதான வழக்கை மியான்மர் ராணுவ கோர்ட்டு விசாரித்து வந்த நிலையில், நேற்று அந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது.

அப்போது பெயிங் தகோன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகவும், எனவே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதாகவும் கோர்ட்டு தெரிவித்தது. அதை தொடர்ந்து, இந்த வழக்கில் பெயிங் தகோனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Next Story