2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு


2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2022 3:09 PM IST (Updated: 3 Oct 2022 3:15 PM IST)
t-max-icont-min-icon

2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது

நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது.

அக்டோபர் தொடக்கம் என்றால் நோபல் பரிசு காலம். ஆறு நாட்கள், ஆறு பரிசுகள், உலகம் முழுவதிலுமிருந்து புதிய முகங்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் மனித உரிமைத் தலைவர்கள் இந்த் நோபல் பரிசு பட்டியலில் இடம் பெறுவர் அதில் தேர்ந்து எடுக்கபட்டு வழங்கப்படுவார்கள்.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை இயற்பியல், புதன்கிழமை வேதியியல் மற்றும் வியாழன் இலக்கியம். 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார விருது அக்டோபர் 10ஆம் தேதியும் அறிவிக்கப்படும்.

கடந்த வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் (David Julius) மற்றும் ஆர்டம் பட்டாபுடியான் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கபட்டது.

வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலமாக உடலில் நடக்கும் மாற்றங்களை, உடலை தொடாமல் அறியும் உணரிகளைக் கண்டுபிடித்ததற்காக இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பரிசை பெற்றனர்.

2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு "அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக" அறிவிக்கப்பட்டு உள்ளது.


மனிதகுலம் எப்போதும் அதன் தோற்றத்தில் ஆர்வமாக உள்ளது. நாம் எங்கிருந்து வருகிறோம், நமக்கு முன் வந்தவர்களுடன் நாம் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம்? ஹோமோ சேபியன்களான நம்மை மற்ற ஹோமினின்களிலிருந்து வேறுபடுத்துவது எது? என ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இன்றைய மனிதர்களின் அழிந்துபோன மூதாதையரான நியண்டர்டாலின் மரபணுவை வரிசைப்படுத்துதல். டெனிசோவா என்ற முன்னர் அறியப்படாத ஹோமினினை கண்டறிந்து உள்ளார்.

முக்கியமாக, சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து தற்போது அழிந்து வரும் இந்த ஹோமினின்களிலிருந்து ஹோமோ சேபியன்களுக்கு மரபணு பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் பாபோ கண்டறிந்தார்.


சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளர் ஆல்பிரட் நோபல், 1895-ம் ஆண்டு எழுதிய உயிலின்படி, இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கும், உலக அமைதிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களை, நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் உள்ள நார்வேஜியன் நோபல் கமிட்டியும், மற்ற துறைகளில் பரிசு பெறுபவர்களை சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசு குழுவும் தேர்வு செய்கிறார்கள். 1901-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை மொத்தம் 962 பேர் நோபல் பரிசு பெற்றிருக்கின்றனர். அவர்களில் 58 பேர் பெண்கள்.

அதாவது, கடந்த 119 ஆண்டுகளில் 6.05 சதவிகித பெண்கள் இப்பரிசை பெற்றுள்ளனர். இந்தியாவில் தொண்டு செய்த அன்னை தெரசா உட்பட, இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு 134 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 17 பேர் பெண்கள்.

அமைதிக்கான பரிசுக்கு அடுத்து, இலக்கிய துறையில்தான் பெண்கள் அதிக நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். இலக்கியத்துக்காக இதுவரை 117 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றில் 16 பரிசை பெண்கள் பெற்றிருக்கிறார்கள். இலக்கியத்துக்கு அடுத்தபடியாக பெண்கள் மருத்துவத்துறையில் பரிசுகளை பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 222 பேர் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பெற்றுள்ள நிலையில், அவர்களில் பெண்கள் 12 பேர்.

1903-ல் நோபல் பரிசுபெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் மேரி கியூரி. இவர் ரேடியம் எனும் தனிமத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து, ஆராய்ந்ததற்காக 1911-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். அவர் பரிசு பெற்று 24 ஆண்டுகள் கழித்து, அவரது மகள் ஐரின் கியூரி 1935-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

வேதியியல் துறையில் இதுவரை 186 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 7 பேர் பெண்கள் ஆவர். இயற்பியல் துறையில் 216 பேருக்கு இதுவரை நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் பெண்கள். 2020-ம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை பெற்றவரில் ஆண்ட்ரியா கெஸ் என்ற பெண்ணும் ஒருவர்.

இதுவரை அளிக்கப்பட்ட நோபல் பரிசுகளில் 2009-ம் ஆண்டு 5 பெண்களுக்கும், 2018, 2020 ஆகிய ஆண்டுகளில் 4 பெண்களுக்கும் அளிக்கப்பட்டதே ஒரு ஆண்டுக்கான அதிகபட்ச அளவாகும்.

உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நோபல் பரிசுகளுக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.

அவர்களில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், சட்டமியற்றுபவர்கள், முந்தைய நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களும் அடங்குவர்.

பரிந்துரைகள் 50 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றைச் சமர்ப்பிப்பவர்கள் சில சமயங்களில் தங்கள் பரிந்துரைகளை பகிரங்கமாக அறிவிக்கிறார்கள், குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு.

1 More update

Next Story