அமெரிக்காவின் புதிய தடையால் வடகொரியா கோபம்: கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை


அமெரிக்காவின் புதிய தடையால் வடகொரியா  கோபம்: கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 Jan 2022 10:04 AM GMT (Updated: 14 Jan 2022 10:04 AM GMT)

வட கொரியா அண்மையில் மேற்கொண்ட ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

பியாங்யாங்,

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா  மீது  புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும், ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல் போக்குடன் செயல்பட்டால் கடும்  விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் எனவும் பகிரங்க எச்சரிக்கையை   கிம் ஜாங் உன் அரசு விடுத்துள்ளது. வடகொரியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பெயரில் இந்த எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

வடகொரியா மீது புதிய தடை ஏன்?

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதன் விளைவாக வடகொரியா ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வந்த சூழலில், கொரோனா பரவல் காரணமாக அங்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளியது.

இதன் காரணமாக வடகொரியாவில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பஞ்சத்தில் தவித்து வந்தாலும், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் ராணுவத்திறனை வலுப்படுத்துவதில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கிம், இந்த ஆண்டு பொருளாதாரத்தை சீரமைப்பது மற்றும் உணவு பற்றாக்குறையை சரிசெய்வதில் மட்டுமே தேசிய அளவில் கவனம் செலுத்தப்படும் என கூறினார்.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணையை சோதித்தது. வடகொரியா உடனான அணுசக்தி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டி வரும் சூழலில் ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா இப்படி ஒரு சோதனையை நடத்தி அதிரவைத்தது.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை சோதித்தது. இது ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட்ட 2-வது ஏவுகணை சோதனை ஆகும்.

வட கொரியா அண்மையில் மேற்கொண்ட ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, அந்த நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.  இதுதவிர, வட கொரிய ஆயுதத் தயாரிப்பு திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மேலும் ஒரு வட கொரியா், ஒரு ரஷியா், ஒரு ரஷிய நிறுவனம் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story