“புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர விரும்பினோம், ஆனால்...” - இம்ரான் கான் வேதனை

பாகிஸ்தானில் தங்கள் அரசால் புரட்சிகர மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் சிறப்பாக செயல்பட்ட 10 அமைச்சகங்கள் மற்றும் அரசுத்துறைகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், அதிகார அமைப்பின் தவறுகள் காரணமாக அவரது அரசாங்கத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்ட மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். மேலும், “தொடக்கத்தில் புரட்சிகர நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக மாற்றத்தை கொண்டு வர நாங்கள் விரும்பினோம், ஆனால் பின்னர் நமது நாட்டின் அமைப்பு அதிர்ச்சியை உள்வாங்க இயலாது என்பதை உணர்ந்தோம்” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எனது அரசு மற்றும் அமைச்சகங்கள் விரும்பிய முடிவுகளை மக்களுக்கு வழங்குவதில் தோல்வியடைந்துள்ளன. அரசாங்கத்துக்கும் நாட்டு நலனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுதான் மிகப் பெரிய பிரச்சினை” எனவும் வேதனை தெரிவித்தார்.
பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து வரும் இம்ரான்கான், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story