அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு கூட போக முடியவில்லை, 20 மணிநேரம் பயணம் எப்படி சாத்தியம்? இந்திய மாணவர்கள் வேதனை


அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு கூட போக முடியவில்லை, 20 மணிநேரம் பயணம் எப்படி சாத்தியம்? இந்திய மாணவர்கள் வேதனை
x
தினத்தந்தி 25 Feb 2022 7:04 PM GMT (Updated: 25 Feb 2022 7:04 PM GMT)

உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அங்கு நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

கீவ்,  

உக்ரைனில் உள்ள பல இந்திய மாணவர்கள், சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனில் ரஷிய படைகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு அங்குள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிவரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் ஊர்திரும்ப முடியாமல் சிக்கி தவித்து  வருகின்றனர்.

மத்திய அரசு, அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு இந்திய மாணவர்கள் உக்ரைனின் எல்லையை கடந்து ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு வந்தாக வேண்டும். ஆனால் அவர்களுக்கு இந்த பயணம் எளிதல்ல. கடும் சவால்களை கடக்கவேண்டியிருக்கும். 

இந்த நிலையில், அங்குள்ள சூழ்நிலைகள் குறித்து கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழக மாணவர் லக்ஷ்மி கூறும்போது, "நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறோம். உக்ரைனின் மேற்கு எல்லையை கடந்து ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு செல்ல முடியாது. அது எங்களிடமிருந்து சுமார் 2,000 கிமீ தொலைவில் உள்ளது. எங்களால் அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு கூட செல்ல முடியாது. நாள் முழுவதும் குண்டுவீச்சு சத்தம் கேட்கிறது. நான் மற்ற மாணவர்களுடன் அவர்களது தனியார் விடுதிக்கு அருகில் உள்ள கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு தற்காலிக பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளேன்.  நாங்கள் எப்படி இந்த இடத்தை கடக்க வேண்டும் என்று கூட எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை" என்றார். 

மற்றொரு மாணவன் நந்தன் கூறுகையில், “தற்போது நிலவும் சூழ்நிலைகளால், இந்த பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருக்கதான் எங்களுக்குத் தெரியும், எவ்வளவு காலம் இப்படி வாழ முடியும் என்று தெரியவில்லை. உணவு, தண்ணீர் எல்லாம் தீர்ந்து போகிறது. தற்போது வாழைப்பழம், பிஸ்கட் சாப்பிடுகிறோம். இப்போது, ​​நாங்கள் எங்கள் சிம் கார்டுகள் மூலம் இணையத்தின் உதவியுடன் எங்கள் குடும்பங்களுடன் பேசுகிறோம். இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்குத் தெரியும்?" இவ்வாறு நந்தன் கூறினார். 

இவ்வாறு இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கித்தவித்துவரும் நிலையில்,  மாணவர்களை மீட்டு நாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

Next Story