"வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு வாருங்கள் எங்கள் மாநிலத்திற்கு"-துபாயில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு வாருங்கள் எங்கள் மாநிலத்திற்கு-துபாயில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 26 March 2022 10:53 AM GMT (Updated: 26 March 2022 10:53 AM GMT)

தொழில் முதலீடுகள் செய்ய வரும் முதலீட்டாளர்களை தமிழகம் வரவேற்க தயாராக இருப்பதாக துபாயில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

துபாய்

அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மந்திரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இன்று ஐக்கிய அமீரகம்-தமிழ்நாடு இடையே 1,600 கோடி ரூபாய்க்கான முதலீடு ஒப்பந்தமானது. குறிப்பாக நோபல் குழுமம் சார்பில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பின்னர் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகள் செய்ய வரும் முதலீட்டாளர்களை தமிழகம் வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அமைந்த மாநிலம். கிட்டத்தட்ட ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலம்.

 2030 ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றிட வேண்டும் என்ற தொலைநோக்குடன் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். 

அந்த லட்சிய இலக்கை அடைவதற்காகத் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் பணியாளர்களுடைய திறனை மேம்படுத்துதல், வருங்கால தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணியாளர்களை தயார்ப்படுத்துதல் உள்ளிட்ட பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 

இந்த நேரத்தில் நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும், சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளது.  வாருங்கள் எங்கள் மாநிலத்தில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு. எல்லோரும் பயனடைவோம் என்று இந்த தருணத்தில் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

தமிழ்நாட்டிற்கும் - துபாய்க்குமான  பிணைப்பு ஏற்கனவே உணர்வுப்பூர்வமாக உள்ளது. வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் மாநிலமான எங்களுடன் சேர்ந்து ஒன்றாக வளர்வதற்கு அழைப்புவிடுக்கிறேன்.வாருங்கள் ஒன்றாக பயணிப்போம் என கூறினார்.



Next Story