தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ரஷிய உளவு அதிகாரிகளை வெளியேற்றும் நெதர்லாந்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 March 2022 10:10 PM GMT (Updated: 29 March 2022 10:10 PM GMT)

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ரஷிய உளவு அதிகாரிகளை நெதர்லாந்து அரசு வெளியேற்ற உள்ளது.

தி ஹேக், 

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இது தவிர ரஷியாவுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுக்கும் விதமாக தங்கள் நாடுகளில் இருந்த ரஷிய அதிகாரிகளை மேற்கூறிய நாடுகள் வெளியேற்றின. 

இந்த நிலையில் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ரஷிய உளவு அதிகாரிகள் 17 பேரை வெளியேற்றுவதாக நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தூதரக அதிகாரிகளாக அங்கீகரிக்கப்பட்ட ரஷிய உளவு அதிகாரிகள் 17 பேரை நாட்டை விட்டு வெளியேற்றுவது தொடர்பாக நெதர்லாந்துக்கான ரஷிய தூதரிடம் சம்மன் வழங்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்துக்கு எதிரான உளவுத்துறை அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. ரஷியாவின் தற்போதைய அணுகுமுறை அந்த உளவுத்துறை அதிகாரிகளின் இருப்பை விரும்பத்தகாததாக ஆக்குகிறது” என கூறப்பட்டுள்ளது.

Next Story