இலங்கையில் அவசர நிலை அமல்: கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் ரோந்து


இலங்கையில் அவசர நிலை அமல்: கொழும்பு நகர வீதிகளில் ராணுவம் ரோந்து
x
தினத்தந்தி 2 April 2022 7:56 PM GMT (Updated: 2 April 2022 7:56 PM GMT)

இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கும் போடப்பட்டதால் கொழும்பு வீதிகளில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. தேசிய அரசு அமைக்க அதிபருக்கு நெருக்கடி வலுக்கிறது.

நெருக்கடியில் தவிக்கும் இலங்கை

இலங்கை தண்ணீரால் மட்டும் சூழ்ந்திருக்கவில்லை. மக்களின் கண்ணீராலும் சூழ்ந்திருக்கிறது என்று கூறத்தக்க விதத்தில் அங்கு பல்வேறு நெருக்கடிகள் ஒரு சேர சூழ்ந்துள்ளன. ஏறத்தாழ 2.25 கோடி மக்கள் வாழுகிற குட்டி நாடான இலங்கை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, சுற்றுலாத்துறை முடங்கியது. இதற்கிடையே அன்னியச்செலாவணி காலியானதால் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

இலங்கை, அதன் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பி இருந்த நிலையில், அன்னியச்செலாவணியில்லாததால், இறக்குமதி பாதித்தது. உணவுப்பொருட்கள், இன்னபிற அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அவற்றின் விலை விண்ணோடும், முகிலோடும் போட்டி போட, சாமானிய மக்களின் வாழ்க்கை தள்ளாடத்தொடங்கியது.

போராட்டம், வன்முறை

இதற்கு மத்தியில் தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட, அடி மேல் அடி விழ, இனியும் பொறுப்பதற்கு இல்லை என்கிற வகையில் மக்கள் பொங்கியெழுந்து தெருவில் இறங்கி போராடினார்கள். 31-ந்தேதி கொழும்பு நகரில் அதிபர் மாளிகை முன் ஆயிரக்கணக்கானோர் கூடி அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து மக்களை விரட்டியடித்தனர். பலர் படுகாயம் அடைய 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கும், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கும் இலங்கை மனித உரிமைகள் கமிஷன் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான ரோகிணி மாரசிங்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவசர நிலை

இந்த அசாதாரணமான சூழலில், அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை அமல்படுத்தி உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை அவரது செயலாளர் காமினி சேனரத் வெளியிட்டுள்ளார்.

பொது ஒழுங்கை பாதுகாக்கவும், அத்தியாவசியப்பொருட்கள், சேவைகளை பராமரிக்கவும் அவசர கால நிலை அவசியம் என்று அதிபர் நியாயப்படுத்தி உள்ளார். அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்த உத்தரவில், சந்தேக நபர்களை வாரண்டு இன்றி கைது செய்து காவலில் வைக்க ராணுவத்துக்கு அதிகாரம் வழங்கினார்.

தேசிய அரசு வருமா?

இந்த நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்துக்கட்சிகளும் அடங்கிய தேசிய அரசை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆளும் கூட்டணியில் வலுத்து வருகிறது.

இந்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முக்கிய கட்சியான முன்னாள் அதிபர் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. இதுபற்றி அதிபர் தரப்பில் அறிவிப்பு ஏதும் இல்லை.

ராணுவம் ரோந்து

இலங்கை முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு போடப்பட்டிருந்தது.

பகலில் மெல்ல மெல்ல கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு வந்து வாங்கினார்கள்.

தலைநகர் கொழும்பு வீதிகளில் ராணுவமும், போலீஸ் படையும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அமெரிக்கா கவனிக்கிறது

இலங்கையில் மாறி வரும் சூழ்நிலைகளை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதையொட்டி இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் கூறும்போது, அமைதியாக போராட்டம் நடத்த இலங்கை மக்களுக்கு உரிமை உள்ளது. இது ஜனநாயகத்தை வெளிப்படுத்த அவசியமானது. நான் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் என குறிப்பிட்டார்.

இதற்கிடையே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் அதிகாரிகளை சந்திப்பதற்காக இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே 8-ந்தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் செல்கிறார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story