பிரேசிலில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு


பிரேசிலில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
x
தினத்தந்தி 3 April 2022 9:29 AM GMT (Updated: 2022-04-03T14:59:35+05:30)

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ,


பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் இந்த வார தொடக்கத்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.  ரியோ டி ஜெனிரோவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.  பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த நாட்டில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அவர்களில் 8 பேர் குழந்தைகள் ஆவார்கள்.  5 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

ரியோ டி ஜெனிரோவில் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு ராணுவ விமானங்களை அனுப்ப உள்ளது என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில், ரியோ டி ஜெனிரோ நகருக்கு வடக்கே அமைந்துள்ள பிரேசிலின் பெட்ரோபோலிஸ் நகரத்தில் பெய்த கனமழை மற்றும் அடுத்தடுத்த நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி பொதுமக்களில் 200 பேர் உயிரிழந்து உள்ளனர்.


Next Story