சீன விமானத்தின் கருப்பு பெட்டிகள் அமெரிக்கா அனுப்பி வைப்பு


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 6 April 2022 8:13 PM GMT (Updated: 6 April 2022 8:13 PM GMT)

132 பேரை பலி கொண்ட விபத்து தொடர்பான சீன விமானத்தின் கருப்பு பெட்டிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பீஜிங், 

சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சூ நகருக்கு கடந்த மாதம் 21-ம் தேதி புறப்பட்ட நிலையில், குவாங்சூவில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 123 பயணிகள், 9 ஊழியர்கள் என 132 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவராத நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டிகளை கண்டுபிடித்தால் மட்டுமே விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும் என்பதால், அவற்றை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி விபத்து நடந்த சில நாட்களுக்கு பிறகு விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் மீட்கப்பட்ட 2 கருப்பு பெட்டிகளையும் ஆய்வு செய்து, உண்மையை கண்டறிவதற்காக அவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். வாஷிங்டனில் உள்ள ஆய்வகத்தில் வைத்து அமெரிக்க நிபுணர்கள் கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்பதால் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விசாரணையில் பங்கேற்றுள்ளதும், கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் சீனா சென்று விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Next Story