கொலம்பியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு; 11 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்த சோகம்


கொலம்பியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு; 11 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்த சோகம்
x
தினத்தந்தி 8 April 2022 12:44 PM GMT (Updated: 8 April 2022 12:44 PM GMT)

கொலம்பியாவில் கனமழையால் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 11 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்து உள்ளனர்.ஆன்டியோகியா,கொலம்பியா நாட்டில் மலைத்தொடர்கள் அதிகம்.  அவ்வப்போது கனமழையும் பெய்யும்.  அந்நாட்டில் உள்ள வீடுகள் சாதாரண முறையில் கட்டப்பட்டு உள்ளன.  இதனால், பரவலாக அந்த நாட்டில் நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், கொலம்பியாவின் ஆன்டியோகியா பகுதிக்கு உட்பட்ட அப்ரியாக்கி நகராட்சி பகுதியில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்து உள்ளனர்.  அதிகாரபூர்வமற்ற முறையில் செயல்பட்டு வந்த தங்க சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் நிலச்சரிவின் பாதிப்புக்கு இலக்காகி உள்ளனர்.

இதனை அந்நாட்டின் பேரிடர் ஆபத்து மேலாண்மைக்கான தேசிய பிரிவு தெரிவித்து உள்ளது.  இந்நிலச்சரிவில் சிக்கி தங்க சுரங்க தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து, ஆன்டியோகியா கவர்னர் அனிபல் கவிரியா, வலி தரக்கூடிய சோகம் என டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கொலம்பியா அதிபர் இவான் டியூக்கும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.  கனமழையால் ஏற்பட்ட சோகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கடந்த மார்ச் 16ந்தேதி மழைக்கால சூழலால் 9 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டனர்.  கடந்த பிப்ரவரி 15ந்தேதி பெரேரா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.  35 பேர் காயமடைந்தனர்.

கடந்த 2017ம் ஆண்டு மொகோவா பெருநகரத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 254 பேர் உயிரிழந்து உள்ளனர்.
Next Story