இம்ரான்கானின் பதவி தப்புமா..? வாக்கெடுப்பை மதியத்திற்கு ஒத்திவைத்தது பாக். நாடாளுமன்றம்


இம்ரான்கானின் பதவி தப்புமா..? வாக்கெடுப்பை மதியத்திற்கு ஒத்திவைத்தது பாக். நாடாளுமன்றம்
x
தினத்தந்தி 9 April 2022 11:54 AM IST (Updated: 9 April 2022 11:54 AM IST)
t-max-icont-min-icon

இம்ரான்கான் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் யாரும் நாடாளுமன்றம் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இ்ஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதால், அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது. அதனால் அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன.

ஆனால், துணை சபாநாயகர் காசிம் சூரி, அந்த தீர்மானத்தை நிராகரித்தார். கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். அதைத்தொடர்ந்து, இம்ரான்கான் சிபாரிசின்பேரில், அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்தார். அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. 9-ந் தேதி காலை 10.30 மணிக்குள், நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்துமாறு துணை சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

எந்த உறுப்பினரையும் ஓட்டுப்போட விடாமல் தடுக்கக்கூடாது என்றும் கூறியது. ஒருவேளை தீர்மானம் தோல்வி அடைந்தால், அரசு வழக்கம்போல் இயங்கலாம் என்றும் தெரிவித்தது.

இந்தநிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. அதில், பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து பாகிஸ்தான் தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் பேசுகையில், “சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இன்றைய சபை நடவடிக்கைகளை நீங்கள் (சபாநாயகர்) மேற்கொள்வீர்கள் என நம்புகிறேன். அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு துணை நிற்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். இந்த தருணத்தை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும்” என்று அவர் கூறினார்.  

பின்னர் பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற சபாநாயகர் அசாத் கைசர், உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணி வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். இதனையடுத்து பாகிஸ்தான் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது, இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மீதான விவாதம் பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் எவரும் சட்டசபையில் இல்லை என்றும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன்னதாக இம்ரான் கானின் கட்சியான பி.டி.ஐ.யின் எந்த உறுப்பினரும் தேசிய சட்டசபைக்கு வரவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 
1 More update

Next Story