லைவ் அப்டேட்ஸ்: ரஷிய ஏவுகணை போர் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 13 April 2022 7:28 PM GMT (Updated: 14 April 2022 8:18 AM GMT)

போருக்கு மத்தியில் ரஷியாவும், உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த 29-ந் தேதி சந்தித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்தின.

கீவ், 

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 50-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷியா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள் பின்வருமாறு:-

ஏப்ரல்14, 1.47 PM


ஏப்ரல்14, 11.50 AM

மரியபோல் நகரில் இருந்து வெளியேற சுமார் 1 லட்சம் பேர் காத்திருக்கின்றனர் - மேயர் தகவல்

ஏப்ரல்14, 11.00 AM

கார்கீவ் நகரில் ரஷியா நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் மேலும் 4 பேர் உயிரிழப்பு - உக்ரைன் அதிகாரிகள் தகவல்

ஏப்ரல் 14,  5.00 A.M

ரஷியாவின் கருங்கடல் போர்க்கப்பல் கடுமையாக சேதமடைந்தது, பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்

கருங்கடலில் ரஷியாவின் ஏவுகணை கப்பல் "மாஸ்க்வா" மீது உக்ரைனின் இரண்டு நெப்டியூன்  கப்பல் ஏவுகணைகளை ஏவியது, இதனால் கடுமையான சேதம் ஏற்பட்டது என்று ஒடெசாவின் பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் டெலிகிராமில் தெரிவித்தார்.

ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் கப்பல் "தீவிரமாக சேதமடைந்தது" என்பதை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் "தீயினால் வெடித்த வெடிமருந்துகள் வெடித்ததன் விளைவாக" பணியாளர்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்டனர்,

ஏப்ரல் 14,  4.00 A.M

உக்ரைனுக்கு கூடுதல் அமெரிக்க இராணுவ உதவி  நிபுணர் வரவேற்பு

ஜான் ஸ்பென்சர், ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ மேஜரும், மேடிசன் பாலிசி மன்றத்தில் நகர்ப்புற போர் நிபுணருமான ஜான் ஸ்பென்சர், அமெரிக்கா உக்ரைனுக்கு பீரங்கி மற்றும் பீரங்கி குண்டுகளை அனுப்புவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளார்.

ஏப்ரல் 14,  3.00 A.M

‘ரஷிய போர் ஒரு இனப்படுகொலை’ ஜோ பைடன் பேச்சால் பரபரப்பு

ரஷிய போர் ஒரு இனப்படுகொலை, உக்ரைனை அழிக்க ரஷியா முயற்சிக்கிறது என்று ஜோ பைடன் கூறியது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள மென்லோவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டு பேசினார். உக்ரைன் போரினால் எரிபொருட்கள் விலை உயர்ந்து வருவது பற்றி அவர் பேசினார். அப்போது அவர் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை ஆவேசமாக தாக்கினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

உக்ரைனுக்கு எதிராக புதின் இனப்படுகொலை செய்கிறார் என்று நான் எண்ணினேன். இனப்படுகொலைக்கான சர்வதேச தரத்தை ரஷியாவின் நடத்தை பூர்த்தி செய்யுமா என்பது குறித்து வக்கீல்கள் முடிவு செய்ய வேண்டும். எனக்கு நிச்சயமாக அப்படித்தான் தோன்றுகிறது. உக்ரைனில் ரஷிய படையினர் செய்த கொடூரமான செயல்களுக்கு இன்னும் பல ஆதாரங்கள் வெளியே வருகின்றன. மேலும் பேரழிவு பற்றி நாம் இன்னும் இன்னும் அதிகமாக நாம் அயிறப்போகிறோம். இது இனப்படுகொலைதானா என்பதை வக்கீல்கள் சர்வதேச அளவில் தீர்மானிக்க விடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அயோவாவில் இருந்து வாஷிங்டன் திரும்புவதற்கு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக நிருபர்களிடம் பேசியபோது, புதின் பற்றி சொன்ன கருத்தை ஜோ பைடன் உறுதி செய்தார். அப்போது அவர், “ஆமாம், ரஷிய போரை நான் ஒரு இனப்படுகொலை என்றே அழைத்தேன். உக்ரைனியர் என்ற ஒருவர் இருக்கக்கூடாது என ஒழித்துக்கட்ட புதின் முயற்சிக்கிறார் என்பது இன்னும் தெளிவாகி இருக்கிறது” என குறிப்பிட்டார்.

ஜோ பைடனின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 14,  2.00 A.M

 ரஷிய அட்டூழியங்களைத் தடுப்பதற்கு  கூடுதலான ஆயுதங்கள் தேவை -  உக்ரைன் அதிபர்

ஜோ பைடனின் இந்த பேச்சை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்றார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ஒரு உண்மையான தலைவரின் உண்மையான வார்த்தைகள். தீமையை எதிர்த்து நிற்பதற்கு பொருட்களை அவற்றின் பெயர்களால் அழைப்பது அத்தியாவசியமானது. இதுவரை வழங்கப்பட்ட அமெரிக்க உதவிகளுக்கு நன்றி. ரஷிய அட்டூழியங்களைத் தடுப்பதற்கு இன்னும் கூடுதலான ஆயுதங்கள் எங்களுக்கு தேவை” என குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 14,  1.00 A.M

ரஷிய, உக்ரைன் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை பிரான்ஸ் அதிபர் முடிவு

போருக்கு மத்தியில் ரஷியாவும், உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த 29-ந் தேதி சந்தித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ரஷிய குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறினார். தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் நகரங்களில் தாக்குதல்களை குறைக்கப்போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர, வரும் நாட்களில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேசப்போவதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 14,  12.00 A.M

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்க 4 நாடுகளின் அதிபர்கள் ‘கீவ்’ பயணம்

ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், பல நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த சில தினங்களுக்கு முன் கீவ் நகருக்கு சென்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசி, இங்கிலாந்தின் ஆதரவை தெரிவித்தார்.

அந்த வரிசையில் நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகியவற்றின் அதிபர்களான ஆண்ட்ர்செஜ் துடா, கிடானஸ் நவ்சேடா, எகிலிஸ் லெவிட்ஸ், அலார் காரிஸ் ஆகியோர் நேற்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு நேற்று ரெயில் பயணம் மேற்கொண்டனர்.

அவர்கள் உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவதுடன் தங்களது ஆதரவை தெரிவிக்கின்றனர். ரஷியாவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது பற்றியும் விவாதிக்கின்றனர்.

உக்ரைன் மரியோபோல் நகரில் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதா?

ரஷியா கைப்பற்ற துடிக்கும் மரியுபோல் நகரில் உக்ரைன் வீரர்கள் 1,000 பேர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு ரஷியாவிடம் சரண் அடைந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், 49-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் வகையில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இப்போதும் உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவியாக 750 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,625 கோடி) ராணுவ உதவி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உதவி ஆயுதங்களாகவும், தளவாடங்களாகவும் அமையும்.

உக்ரைன் போரில் ரஷியாவின் முக்கிய இலக்காக மரியுபோல் நகரம் அமைந்துள்ளது. போர் தொடங்கிய நாளிலிருந்து இந்த நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ளன. தாக்குதல்கள் தொடர்கின்றன. உக்ரைன் படை வீரர்கள் சரண் அடைந்தால் மட்டுமே மரியுபோல் நகரில் தாக்குதல் நிறுத்தப்படும் என்று ரஷிய அதிபர் புதின் அறிவித்திருந்தார்.

இந்த நகரம், உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகத்தை கொண்டுள்ளது. கிரீமியாவுக்கும், கிழக்கு உக்ரைனின் டான்பாசுக்கும் இடையே ஒரு பாலமாக திகழ்கிறது. மரியுபோலை கைப்பற்றி விட்டால் நிலம் மற்றும் கடல்சார் நன்மைகள் கிடைக்கும்.

மரியுபோல் நகரம் வீழ்ந்து விட்டால், அஜாவ் கடலையொட்டியுள்ள எல்லா பிராந்தியங்களும், கருங்கடலையொட்டியுள்ள பெரும்பாலான பிராந்தியங்களும் ரஷியாவின் கைக்கு வரும். இதனால் உக்ரைனின் கடல்வழிவர்த்தகம் முடிவுக்கு வரும். எனவேதான் மரியுபோல் நகரை கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

மரியுபோல் நகரம், இந்த பூமியின் நரகமாக மாறி இருக்கிறது. குடிநீர், உணவு, வெப்பமூட்டும் கருவிகள் என எந்த அத்தியாவசிய பொருளும் கிடையாது. ஆனால் இங்கு குண்டு வீச்சு மட்டும் நிற்கவில்லை என்று உக்ரைன் எம்.பி. டிமிட்ரோ குரின், பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இங்கிருந்து 1 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு அப்பாவி மக்களில் 21 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக நகர மேயர் கூறி உள்ளார்.

இந்த நிலையில் அந்த நகரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் கடற்படையினர், ரஷியாவிடம் சரண் அடைந்துள்ளதாக செசன்யாவின் தலைவர் ரம்ஜான் கதிரோவ், சமூக வலைத்தளம் ஒன்றில் கூறி உள்ளார்.

மரியுபோல் நகரை கைப்பற்றிவிடும் நிலையில் ரஷியா உள்ள சூழ்நிலையில், 1,026 உக்ரைன் படைவீரர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளதாக ரஷியாவும் கூறுகிறது.

Next Story