பிலிப்பைன்சில் மெகி புயல் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு

பிலிப்பைன்சில் பருவகால புயலான மெகி தாக்கியதில் பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து உள்ளது.
மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த மெகி புயல் பாதிப்புகளால் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் அதிகளவில் மக்கள் உயிரிழந்து உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 81 பேர் மண்ணில் புதைந்து போயுள்ளனர்.
இதனால், மொத்த பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து உள்ளது. அவற்றில் 118 பேர் மத்திய பிலிப்பைன்சிலும், 3 பேர் தெற்கு பிலிப்பைன்சிலும் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 236 பேர் காயமடைந்து உள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் பிலிப்பைன்சில் ஏறக்குறைய 20 புயல்கள் தாக்குகின்றன. இவை கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதில் நடப்பு ஆண்டின் முதல் புயலான மெகி கடந்த ஞாயிற்று கிழமை பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை கடுமையாக தாக்கியது. சக்தி வாய்ந்த இந்த புயல் பிலிப்பைன்சின் பல மாகாணங்களை புரட்டி போட்டு விட்டது.
புயலை தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் லெய்டே மாகாணம் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ளது. எனினும், இதுவரை 76 பேர் மட்டுமே உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண் கவுன்சில் தெரிவித்து உள்ளது. 29 பேரை காணவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் ஆகியவற்றால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story