வான் எல்லைக்குள் நுழையும் எந்த பொருளையும் அழிக்கும் லேசர் ஆயுதம் - இஸ்ரேல் அதிரடி


வான் எல்லைக்குள் நுழையும் எந்த பொருளையும் அழிக்கும் லேசர் ஆயுதம் - இஸ்ரேல் அதிரடி
x
தினத்தந்தி 15 April 2022 6:16 AM GMT (Updated: 15 April 2022 6:16 AM GMT)

வான் எல்லைக்குள் நுழையும் எந்த இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் லேசர் ஆயுதத்தை இஸ்ரேல் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் அணு ஆயுதம் உள்பட பல்வேறு ஆயுதங்களை தன்வசம் வைத்துள்ள நாடுகளில் ஒன்று. மேலும், அயன் டோம் எனப்படும் அதிநவீன வான்பாதுகாப்பு ஆயுத அமைப்பையும் இஸ்ரேல் கொண்டுள்ளது. 

எதிரிநாடுகளில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை நடுவானில் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் அயன் டோம் உருவாக்கப்பட்டது. 

குறிப்பாக, பாலஸ்தீனத்தின் காசா முனை, மேற்குகரை பகுதியில் இருந்து ஏவப்படும் ராக்கெட், ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் முக்கிய நோக்கத்தோடு இந்த அயன் டோம் உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் , காசா முனையில் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே கடந்த ஆண்டு நடந்த போரில் இந்த அயன் டோம் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் உலக அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், இஸ்ரேல் தற்போது புதிய வகை ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அயன் பீம் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆயுதம் லேசர் மூலம் இயங்கும் வான்பாதுகாப்பு அமைப்பாகும். 

வான் எல்லைக்குள் நுழையும் ஏவுகணை, ஆளில்லா விமானம், ராக்கெட் என எந்தவித பறக்கும் பொருளையும் இந்த ஆயுதம் லேசர் மூலம் தாக்கி அழிக்கும். இந்த லேசர் வான்பாதுகாப்பு அமைப்பு எதிரிகளின் ஏவுகணை, ஆளில்லா விமான என எல்லைக்குள் வான்வழியாக நுழையும் எந்த வித பொருளை துல்லியமாகவும், சத்தமின்றியும் தாக்கி அழிக்கும் வல்லமைபெற்றதாகும். இந்த லேசர் வான்பாதுகாப்பு அமைப்பு இலக்கை தாக்குவது கண்களுக்கு தெரியாது எனவும் இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் தெரிவித்துள்ளார். 

இதன் மூலம் உலகிலேயே முதல் முறையாக லேசர் வான் பாதுகாப்பு ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்த முதல் நாடு என்ற பெருமையை இஸ்ரேல் பெற்றுள்ளது.

Next Story