சர்வதேச டிஜிட்டல் முறை பணம் செலுத்துதலில் 40% இந்தியாவில் நடந்தது; பிரதமர் மோடி பெருமிதம்


சர்வதேச டிஜிட்டல் முறை பணம் செலுத்துதலில் 40% இந்தியாவில் நடந்தது; பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 3 May 2022 5:53 AM GMT (Updated: 3 May 2022 8:16 AM GMT)

உலகம் முழுவதும் 2021ம் ஆண்டில் நடந்த ஆன்லைன் டிஜிட்டல் முறை பணம் செலுத்துதலில் 40% இந்தியாவில் நடந்துள்ளது என பெர்லினில் இந்திய சமூகத்தின் முன் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பெர்லின்,3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லினுக்கு நேற்று அதிகாலை சென்றார்.  அவருக்காக காத்திருந்த ஜெர்மனி வாழ் இந்தியர்கள் பாரம்பரிய முறைப்படி பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.  அவருடன் பலர் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

இதன்பின்பு, ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்சை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்துதல், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து ஜெர்மனியின் பெர்லின் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் முன் பிரதமர் மோடி பேசினார்.  அவர் கூறும்போது, உலகம் முழுவதும் கடந்த 2021ம் ஆண்டில் நடந்த ஆன்லைன் டிஜிட்டல் முறை பணம் செலுத்துதலில் 40 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் நடந்துள்ளது.

அரசுடன் இந்த தொழில்நுட்ப முறை ஒருங்கிணைக்கப்பட்டது, புதிய இந்தியாவின் புதிய அரசியல் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதுடன், ஜனநாயகத்தின் திறன் வெளிப்பட்டதற்கான சான்றாகவும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, நீங்கள் இங்கே (ஜெர்மனி) வருவதற்காக, எந்த நாட்டை விட்டு புறப்பட்டு சென்றீர்களோ, அதே நாடுதான், தற்போதும் உள்ளது.  அதே அதிகாரிகளும், அதே அலுவலகங்களும் உள்ளன.  அதே மேசை, அதே கோப்புகள், அதே பேனா உள்ளன.  அரசாங்க இயந்திரம் கூட அதேதான்.  ஆனால் தற்போது எடுக்கப்படும் முடிவுகள் சிறப்பாக உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

ஏறக்குறைய மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசின் 10 ஆயிரம் சேவைகள் இணையதளம் வழியே நடைபெறுகின்றன.  அது அரசின் உதவியாக இருக்கட்டும், கல்வி உதவி தொகை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணம் என ஒவ்வொன்றும் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

இதனால் தற்போது, டெல்லியில் இருந்து நான் ரூ.1 அனுப்புகிறேன்.  ஆனால், 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது என எந்தவொரு பிரதம மந்திரியும் கூற முடியாது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை குறிப்பிடும் வகையில் பேசினார்.

85 பைசா சுரண்டலில் ஈடுபட்ட அந்த கை என்ன வகையானது என காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் பற்றி குறிப்பிடும் வகையிலும் பிரதமர் மோடி பேசினார்.


Next Story