சர்வதேச அளவில் நாடு எழுச்சி நடை போட இந்திய வம்சாவளியினர் உதவ வேண்டும்; பிரதமர் மோடி பேச்சு


சர்வதேச அளவில் நாடு எழுச்சி நடை போட இந்திய வம்சாவளியினர் உதவ வேண்டும்; பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 3 May 2022 7:29 AM GMT (Updated: 3 May 2022 7:29 AM GMT)

சர்வதேச அளவில் நாடு எழுச்சி நடை போட இந்திய வம்சாவளியினர் உதவ வேண்டும் என பெர்லினில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.



பெர்லின்,



ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய சமூகத்தினர் இடையே பேசும்போது, விரைவான வளர்ச்சிக்கு அரசியல் நிலைத்தன்மை தேவை என்று இளைய மற்றும் லட்சிய இந்தியா புரிந்து கொண்டுள்ளது.  அதனால், 3 தசாப்தங்களாக நீடித்த ஸ்திரமற்ற நிலைக்கு ஒரு பட்டனை அழுத்தி முடிவு ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

21ம் நூற்றாண்டின் இந்த தருணம் இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  தீர்மானத்துடன் முன்னோக்கி பயணிப்பது என்ற எண்ணத்திற்கு, இன்றைய புத்தெழுச்சி பெற்ற இந்தியா தன்னை மாற்றி கொண்டுள்ளது.

சர்வதேச அளவில் இந்தியா எழுச்சி நடை போடுவதற்கு இந்திய வம்சாவளியினர் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  நாடு ஓர் உறுதியான முடிவை எடுக்கும்போது, அந்நாடானது புதிய பாதைகளில் நடைபோட்டு, விரும்பிய இலக்குகளை அடைந்து காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கிடைப்பது, வாழ்க்கை தரம், எளிய முறையிலான வேலைகள், தரம் வாய்ந்த கல்வி, எளிதில் தொழில் செய்ய முடிவது, தரம் வாய்ந்த பயணம், தரமிக்க பொருட்கள் என்று ஒவ்வொரு பிரிவிலும் கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா விரைவான முன்னேற்றங்களை கண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு டிஜிட்டல் முறையில் அரசு பணபரிமாற்றங்களை நேரடியாக அனுப்பி வருகிறது.

இதனால் தற்போது, டெல்லியில் இருந்து நான் ரூ.1 அனுப்புகிறேன்.  ஆனால், 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது என எந்தவொரு பிரதம மந்திரியும் கூற முடியாது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை குறிப்பிடும் வகையில் பேசினார்.  85 பைசா சுரண்டலில் ஈடுபட்ட அந்த கை என்ன வகையானது என காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் பற்றி குறிப்பிடும் வகையிலும் பிரதமர் மோடி பேசினார்.

நேரடி பண பரிமாற்றத்தின் வழியே இதுவரை 8 ஆண்டுகளில் ரூ.22 லட்சம் கோடிக்கும் மேலாக பயனாளர்களுக்கு அரசு பணபரிமாற்றம் செய்து உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story