இலங்கையுடன் மே 9ல் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை; சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு


இலங்கையுடன் மே 9ல் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை; சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 May 2022 2:04 PM GMT (Updated: 7 May 2022 2:04 PM GMT)

இலங்கையுடனான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை 9ந்தேதி தொடங்கி 23ந்தேதி வரை நடைபெறும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்து உள்ளது.




கொழும்பு,



இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது. 

எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என இலங்கை முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் இடையேயான முதல் சுற்று பேச்சுவார்த்தை கடந்த மாதம் நிதியத்தின் தலைமையகத்தில் நடந்தது.

இதனை தொடர்ந்து இலங்கையுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 9ந்தேதி தொடங்கி 23ந்தேதி வரை நடைபெறும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி நிதியத்தின் இலங்கைக்கான செயல் தலைவர் மசாஹிரோ நொஜாகி கூறும்போது, சர்வதேச நாணய நிதியம் அதன் கொள்கைகளின்படி, இலங்கைக்கு உதவி செய்வதில் முனைப்புடன் உள்ளது என கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் நிலை குறிப்பிட்ட அளவில் நீடிக்காமல், அதனையும் கடந்து செல்ல கூடிய வகையில் உள்ளது என மதிப்பிடப்பட்டு உள்ளது.  அதனால், விரைவாக நிதி வழங்குதல் உள்ளிட்ட திட்டத்தின் கீழ், நிதி வழங்குவதற்கான ஒப்புதலை நிதியம் அளிப்பதற்கு ஏற்ப, வழங்கிய கடன் மீண்டும் திரும்ப அளிக்கப்படும் என்பதற்கான போதிய உறுதிமொழியையும் கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இலங்கையில் வெளிநாட்டு கரன்சி பற்றாக்குறை பிரச்சனையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான நிதி வழங்கும் வசதி மற்றும் பெரிய அளவில் விரிவான நிதி வழங்கும் வசதி ஆகியற்றின் மீது இலங்கை அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.




Next Story