மெக்சிகோவில் பயங்கரம்: கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் உயிரிழப்பு


மெக்சிகோவில் பயங்கரம்: கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 8 பேர் உயிரிழப்பு
x

மெக்சிகோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தின் ஜெரெஸ் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது.

'எல் வெனாடிடோ' என்ற பெயரில் இயங்கும் இந்த கேளிக்கை விடுதி உள்ளூர் மக்களிடம் மிகவும் பிரபலமானதாகும். தினந்தோறும் இரவு இந்த கேளிக்கை விடுதியில் இளைஞர்களின் கூட்டம் நிரம்பி வழியும்.

அந்த வகையில் சம்பவத்தன்று இரவிலும் கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.

கேளிக்கை விடுதியின் ஊழியர்கள், இசை மற்றும் நடன கலைஞர்கள் மற்றும் வாடிக்கையாளர் என அனைவரும் அலறி துடித்தபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த மர்ம நபர்கள் கண்ணில்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருந்தனர்.

போலீசார் விரைந்தனர்

இதில் பெண்கள் உள்பட 13 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதற்கிடையில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு நடந்த தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

8 பேர் உயிரிழப்பு

அதனை தொடர்ந்து, படுகாயமடைந்த மற்ற 7 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் இறந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 8 உயர்ந்தது. சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Next Story