சூடானில் வான்வழி தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு


சூடானில் வான்வழி தாக்குதல்; 22 பேர் உயிரிழப்பு
x

சூடானில் நடந்த வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கார்டூம்,

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இதனிடையே, ராணுவத்திற்கும் துணை ராணுவத்தின் இடையே மோதல் ஏற்பட்டது.

துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படை தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ராணுவத்திற்கும் - துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்படது. துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படையினர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியும் கொடுக்கப்பட்டது.

ராணுவ தளங்கள் மீது துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த மோதல் சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளனர். எனினும், ராணுவம் - துணை ராணுவம் இடையே அவ்வப்போது, சண்டை நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டு தற்காலிக மோதல் நிறுத்தம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் தலைநகர் கார்டூமுக்கு அடுத்து உள்ள ஓம்தூர்மன் நகரில் குடியிருப்பு பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் மிக கொடூர தாக்குதலில் இது ஒன்றாகும். கடந்த மாதம் இதேபோன்று நடந்த வான்வழி தாக்குதல் ஒன்றில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.


Next Story